ETV Bharat / city

விடிய விடிய நடந்த அதிமுக பொதுக்குழு குறித்த விவாதம்;23 தீர்மானங்களை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் அனுமதி

author img

By

Published : Jun 23, 2022, 9:53 AM IST

Updated : Jun 23, 2022, 10:09 AM IST

அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி இன்று (ஜூன் 23) நடத்தலாம் என்றும், 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றலாம் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவை நடத்தவும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றவும் அனுமதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 22) இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2017ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழுவில் தெரிவிப்பதாக கூறப்பட்ட அஜெண்டாவை விட, கூடுதல் அஜெண்டா கூடாது என்பதுதான் தனி நீதிபதி முன்பு வாதம் செய்யப்பட்டது.

இன்று (ஜூன் 23) நடக்க உள்ள பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதுதவிர கூடுதல் தீர்மானங்கள் வரக் கூடும் என்ற சந்தேகமும், 'ஒற்றை தலைமை' கொண்டு வரப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. இரட்டை தலைமை என்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு, உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என கூறி தங்கள் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடலாம். கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம். 2017ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். 2021ல் கொண்டு வரப்பட்ட திருத்தப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் முடிவுகள் எடுக்க முடியும். பொதுக்குழுவில் என்ன நடக்க போகிறது என்பது வருபவர்களுக்கு தெரிய வேண்டும். அதற்கான சிந்தனையோடு அவர்கள் வருவார்கள்.

பொதுக்குழு நடத்தலாம். தீர்மானங்கள் மாற்றப்படக்கூடாது என தெரிவித்தோம். ஆனால், அதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. பாதுகாப்பான இடைக்கால உத்தரவு இல்லாமல், பொதுக்குழு நடந்தால், வழக்கே செல்லாததாகிவிடும். பொதுக்குழு நடைபெறலாம். ஆனால், கட்சி விதிகளை பின்பற்ற வேண்டும். கூடுதல் தீர்மானங்கள் சேர்க்க அனுமதிக்க கூடாது. அடுத்து 15 நாள் நோட்டீஸ் கொடுத்து பின் பொதுக்குழுவை கூட்டலாம்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு நடைபெற வேண்டும். ஒற்றைத் தலைமைக்கு ஒப்புதல் அளித்தவர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் சேர்க்க முடியாது என வாதம் செய்தார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை வகுக்க, திருத்த, நீக்க பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. மற்ற அமைப்புகளை விட அரசியல் கட்சிகள் வேறுபட்டவை. 23 தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இதைத் தவிர வேறு எந்த தீர்மானமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் சேர்க்க கூடாது.

பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கட்சி தொண்டர்கள் தேர்வு செய்வர் என்ற விதியை மாற்ற முடியாது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பாவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்படும் என எந்த வாதமும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படவில்லை. கட்சி விதிகளுக்கு உட்பட்டு இதுவரை செயல்பட்டுள்ளேன்.

23 தீர்மானங்கள் இருவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் புதிய கோரிக்கை வைக்கப்பட்டாலும் அதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் ஒப்புதல் இல்லாமல் எந்த வித புதிய தீர்மானமும் கொண்டு வர முடியாது. கட்சி விதிகளை தளர்த்தவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம்: ஓ.பன்னீர்செல்வம் பாதிப்படைவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடந்துள்ளார். அவ்வாறு தொடர முடியாது. விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும், அதனால் பொதுக்குழு உறுப்பினரான மனுதாரருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படப் போகிறது என நிரூபிக்கவில்லை. விதிகளை திருத்த பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தால் அடிப்படை கட்டமைப்பு குறித்த கேள்வி எழாது. பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுக்குழு தான் கட்சியில் உச்சபட்ச அதிகார அமைப்பு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அல்ல. பொதுக்குழு கட்சி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கலாம். பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. பொதுக்குழுவின் உறுப்பினர்கள் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு எதையும் விவாதிக்க கூடாது என்பதை ஏற்க முடியாது. தனி நபர்களை விட பொதுக்குழுவே மேலானது.

தனி நீதிபதி முன்பாக அஜெண்டா வழங்கப்பட்டதாக ஒத்துக்கொண்டுவிட்டு தற்போது இல்லை என ஒபிஎஸ் மறுப்பது சரியில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அஜெண்டா இல்லாமல் பொதுக்குழுவை எப்படி நடத்துவீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பழனிச்சாமி தரப்பு, அஜெண்டாவை வழங்க வேண்டும் என்பது விதியல்ல.

கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 23 தீர்மானங்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. கூட்டம் தொடர்பான நோட்டீஸ் மட்டுமே அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜெண்டா கொடுப்பதே இல்லை.

2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளர்களை உறுப்பினர்கள் தேர்வு செய்வர் என்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படலாம். இதையடுத்து, கூட்டத்தில் என்ன நடக்க போகிறது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. எழுதப்படாத தீர்மானங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எழுதப்படாத செயல் திட்டம் ஏதும் இல்லை. கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏதேனும் பிரச்னையை எழுப்பக் கூடும் என கூறப்பட்டது. எழுதப்படாத தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்பது கட்சியை ஒடுக்குவதைப் போல் உள்ளது. அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும். அவர்கள் தங்களது கருத்தை கூறலாம். அவர்கள் விரும்பவில்லை என்றால் எதுவும் நடக்காது.

இணை ஒருங்கிணைப்பாளராக நான் எந்த தனிப்பட்ட முடிவும் எடுக்கவில்லை. பொதுக்குழு தான் அனைத்து முடிவையும் எடுக்கும். இணை ஒருங்கிணைப்பாளராக நான் எதுவும் செய்யவில்லை. அவ்வாறு கூறுவது தவறு. இன்று (ஜூன் 23) என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது உறுப்பினர்கள் தான் முடிவெடுப்பர். யூகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வரக் கூடாது. 23 தீர்மானங்களும் இன்னும் வரைவு நிலையிலேயே உள்ளது. எந்த உறுப்பினராக இருந்தாலும் தீர்மானத்தை முன் மொழியலாம்.

பழனிச்சாமி தரப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர் செல்வம் தரப்பு, 50 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி போல இருந்த அமைப்பு, தற்போது ஒருவர் முடிவெடுத்து அதற்கு அனைவரும் ஒத்துக்கொள்ள வைப்பது போல மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்ற மனுதாரர் அச்சம் நிஜமாகக் கூடாது. எழுதப்படாத செயல் திட்டம் இல்லாதபோது, கூட்டத்தில் விவாதிக்கலாம். ஆனால், தீர்மானம் நிறைவேற்ற கூடாது.

பொதுக்குழு நடத்தலாம், 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், எந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ?.. 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jun 23, 2022, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.