ETV Bharat / city

அயனாவரம் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jul 30, 2022, 3:56 PM IST

MHC ordered CBCID to convert Suspicious death case into murder charges
MHC ordered CBCID to convert Suspicious death case into murder charges

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தும்படி சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அயனாவரம் காவல் நிலையத்தில் 'காவல் துறையின் நண்பனாக' (Friends of Police) பணியாற்றிய நித்தியராஜை 2012ஆம் ஆண்டு, ஜனவரி 11ஆம் தேதி ஐசிஎஃப் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலிங்கம் விசாரணைக்காக அழைத்து சென்றார்.

இதன்பின்னர், அவரை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி, புழல் சிறையில் அடைந்தார். 5 நாள்களுக்கு பிறகு ஜனவரி 16ஆம் தேதி நித்தியராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சந்தேக மரணம் என்று காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், காவல் துறையினர் தாக்கியதால்தான், தன் மகன் உயிரிழந்ததாகவும், அதனால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரியும் நித்தியராஜின் தாயார் பூங்குழலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார்.

அதோடு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும், மகனின் மரணத்திற்கு இடைக்கால இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, நித்தியராஜின் மனைவியும், அவரது 8 வயது குழந்தையும் தவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் என்று கூறி, ஒருவரை மிரட்டி செல்ஃபோன் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரிலேயே நித்தியராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை பிடிக்க சென்றபோது தப்பித்து ஓடியதால் கீழே விழுந்ததில் நித்தியராஜ்க்கு காயம் ஏற்பட்டது.

காவல் துறை அவரை தாக்கவில்லை என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி இளந்திரையன், "சந்தேக மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்ற வேண்டும்" என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதோடு உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறையினரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து தப்பிய மூன்று கைதிகள் - பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.