ETV Bharat / city

திருச்செந்தூருக்கு ரூ.300 கோடி - அறநிலையத்துறை வரலாறு காணாத பெரும் திருப்பணி

author img

By

Published : Sep 28, 2022, 5:02 PM IST

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.9.2022) தலைமைச் செயலகத்தில், அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

2021-22 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் “திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, முழுமையான திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உபயதாரர் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோயில் உட்கட்டமைப்பு மற்றும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகளை செய்ய வேண்டும்.

அதாவது, மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வு அறை ஏற்படுத்துதல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், திருக்கோயில் வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள்.

திருக்கோயில் நிதி மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, திருக்கோயிலின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள், என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள பணிகளை முதலமைச்சர் இன்று(செப்.28) தொடங்கி வைத்தார்.

அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை இவ்வாறான மிகப்பெரிய திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருமணச் சான்று இணையவழி திருத்தம் செய்யும் வசதி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.