ETV Bharat / city

இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் மறுத்ததற்கு அதிமுக அரசே காரணம்! - திமுக குற்றச்சாட்டு

author img

By

Published : Oct 26, 2020, 4:31 PM IST

சென்னை: மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்காமல் போனதற்கு தமிழ்நாடு அரசின் செயல்பாடே காரணம் என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

court
court

மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு, திமுக, அதிமுக, பாமக, மதிமுக, திக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தாண்டு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், ”சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு சார்பில் சரியான குழு அமைக்கப்படாததே வழக்குத் தள்ளுபடி செய்யப்படக் காரணம்.

இந்த ஆண்டிலிருந்தே இட ஒதுக்கீடு கோராமல், அடுத்த கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட தமிழ்நாடு அரசுத் தரப்பில் குறிப்பிட்டதாலேயே இந்தாண்டு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனது. தமிழ்நாடு அரசின் தவறே இந்தாண்டு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் போனதற்கு காரணம்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சரியான குழுவை அமைத்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திருந்தால், இந்தாண்டு இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டினாலும் எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு பெற முடியவில்லை“ என்றார்.

இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் மறுத்ததற்கு அதிமுக அரசே காரணம்! - திமுக குற்றச்சாட்டு

தொடர்ந்து, மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டம் இயற்றி இந்த ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் வில்சன், ஆளுநரிடம் மசோதா நிலுவையில் இருந்தாலும், மாநில அரசின் அதிகாரம் 162இன் படி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சட்டம் இயற்றலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.