ETV Bharat / city

மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர்

author img

By

Published : Nov 21, 2020, 3:08 PM IST

Updated : Nov 21, 2020, 4:22 PM IST

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

15:05 November 21

மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர்

சென்னை: 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துக் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. அதன்படி, இந்தாண்டு மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபின பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, இச்செலவினங்களை வழங்குவதற்காக Post Matric கல்வி உதவித் தொகை, இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவை பிறப்பித்தேன். 

கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை அறிவித்தேன். மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை (scholarship) அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். 

அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கி, சமநீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. மருத்து மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பிறகும், திமுக உதவுவதாக ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் நாடகம் என்பதை மக்கள் நன்கு அறிவர்“ என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Last Updated : Nov 21, 2020, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.