ETV Bharat / city

இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

author img

By

Published : Mar 21, 2022, 8:26 PM IST

கட்டுடல் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இளம் பெண்களை மயக்கி, காதல் வலையில் விழவைத்து பாலியல் வன்கொடுமை செய்த மாடலிங் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் காரில் வைத்து 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!
இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக, இளைஞர் ஒருவர் மீது வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் காதலிப்பதாகப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த முகமது சையத்(26) என்பதும், இவர் பி.காம் படித்துவிட்டு மாடலிங், டிவி சீரியல்களில் துணை நடிகராகவும் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகமது சையத் மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் துறையிலிருந்து வருவதும், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போட்டோ ஷுட்டில் எடுக்கக்கூடிய புகைப்படங்களை முகமது சையத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இனிப்பாகப் பேசி இம்சை செய்த கொடுமை

குறிப்பாக 6 பேக் உடலமைப்பு கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் முகமது சையத், பதிவிட்டு வந்ததாகவும், அந்த புகைப்படங்களைப் பார்த்த மாடலிங் பெண்கள் பலர் முகமது சையத்திடம் பேசி வந்துள்ளனர். முகமது சையத் தன்னை ஒரு பணக்காரரைப் போல் பாவித்துக் காட்டி, இளம்பெண்களிடம் காதலிப்பதாகக் கூறி, தனது காரில் ஈ.சி.ஆர் போன்ற பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் முகமது சையத், கடந்த மூன்றாண்டுகளாகப் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்துச் சுற்றித் திரிந்தபோது, அந்தப் பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றபோது, எதேச்சையாக முகமது சையத்தின் கைபேசியைப் பார்த்த அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

காதலியிடம் கையும் களவுமாகப் பிடிபட்டான்!

இன்ஸ்டாகிராமில் 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் காதலிப்பதாகக் கூறி, முகமது சையத் பேசி வந்ததும், இன்ஸ்டாகிராமில் முகமது சையத் பேசி வந்த பெண்களின் ஐடியை எடுத்துக் காதலி தொடர்பு கொண்டுள்ளார். அப்போது முகமது சையத் தங்களைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியும் பல முறை கேளிக்கை விடுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பல முறை காரிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் முகமது சையத் காதலிப்பதாகக் கூறி, பல இளம் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணப்பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை போலப் பல பேரை ஏமாற்றிய முகமது சையத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முகமது சையத்திடம் காரை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:புதையல் பேராசையில் பல லட்சங்களைத் தொலைத்த அப்பாவிப் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.