ETV Bharat / city

தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலில் மேயர் பதவிக்கு ஏன் நேரடி - மறைமுகத் தேர்தல்?

author img

By

Published : Feb 28, 2022, 10:35 AM IST

தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலில் மேயர் பதவிக்கு ஏன் நேரடி - மறைமுகத் தேர்தல் என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

explanation on direct and indirect election process
மேயர் பதிவிக்கான தேர்தல் முறை

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளட்சித் தேர்தலில் ஆளும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பெரும் வெற்றிபெற்றுள்ளன.

அனைத்து மாநகராட்சி மேயர்களும், பேரூராட்சி, நகராட்சித் தலைவர்களும் வருகிற மார்ச் நான்காம் தேதி மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக மறைமுகத் தேர்தலானது, திமுக அரசால் சட்டம் இயற்றப்பட்டு 1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

மறைமுகத் தேர்தலுக்கான அறிவிப்பு

1996ஆம் ஆண்டுக்கு முன்னர் 1973ஆம் ஆண்டு சென்னை மட்டும்தான் மாநகராட்சியாக இருந்தது. பின்னர், அப்போது இருந்த திமுக அரசால் மாநகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. அதன்பிறகு 23 ஆண்டுகள் கழித்து 1996ஆம் ஆண்டு மாநகராட்சிக்கான தேர்தல் திமுக அரசால் நடத்தப்பட்டது.

1996, 2001ஆம் ஆண்டு மாநகராட்சிகளுக்கு நேரடி தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், 2006ஆம் ஆண்டு திமுக அரசால் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் 2011ஆம் ஆண்டு அதிமுக அரசால் நேரடித் தேர்தல் நடத்தப்பட்டது.

பின்னர் 2016ஆம் ஆண்டு சட்டச் சிக்கல் காரணமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த முடியவில்லை. தற்போது ஆளும் திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்முகத் தேர்தல் என்றால் என்ன?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களது மேயர் வேட்பாளர்களை அறிவித்துவிடும். அதன்படி, அந்த மேயர் நகர் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் பரப்புரை மேற்கொள்வார்.

தேர்தலின்போது வாக்காளர்கள் இரண்டு வாக்கு அளிக்க வேண்டும். அதாவது, வார்டு உறுப்பினர்களுக்கு ஒரு வாக்கும், மேயர் வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கும் அளிக்க வேண்டும். இதில் அதிக வாக்கு பெறுபவர்கள் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மறைமுகத் தேர்தல் என்றால் என்ன?

இந்தத் தேர்தல் முறையில் அரசியல் கட்சிகள் தங்களது மேயர் வேட்பாளர்களின் பெயரைத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்காது. மேலும், வாக்காளர்கள் வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் தங்களது வாக்கினைச் செலுத்துவார்கள்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறுகிறதோ, அந்தக் கட்சியிலோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளிலோ ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இது குறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் கூறுகையில், "1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் உள்ளாட்சித் தேர்தலையும் நேரடித் தேர்தலாக மாற்றி களம் கண்டது. இதேபோல் 2001ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலையும் நேரடித் தேர்தலாகவே சந்தித்தது. 2006ஆம் ஆண்டு திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றாலும், அப்போது நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக கணிசமான வாக்குகளைப் பெற்றது.

எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் தோற்றாலும் கூட்டணியுடன் சேர்த்து 66 இடங்களைக் கைப்பற்றியது. இதனைச் சுதாரித்துக்கொண்ட திமுக உள்ளாட்சித் தேர்தலை மறைமுகத் தேர்தலாக நடத்தியது. 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதால் நேரடித் தேர்தலை நடத்தியது.

2021ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், அதிமுக பலமான எதிர்க்கட்சியாக இருப்பதால் திமுக உள்ளாட்சித் தேர்தலை மறைமுகத் தேர்தலாகத் திட்டமிட்டது" என்றார்.

எந்த முறை தேர்தல் ஜனநாயகத்துக்கு உதவும்?

”எந்த ஒரு தேர்தலும், குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்முகத் தேர்தலாக இருந்தால்தான் அது மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் உதவிகரமாக இருக்கும். உதாரணமாக மாநராட்சி நேரடி தேர்தல்களில் மேயராகப் போட்டியிடுபவர்கள், அந்தக் குறிப்பிட்ட மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பார்கள்.

பிறகு குறிப்பிட்ட வேட்பாளர் மேயராக வெற்றிபெற்றால் மக்களின் குறைகளைத் தீர்க்க எளிதாக அமையும்” என்கிறார் அரசியல் விமர்சகர் அ. மார்க்ஸ்.

ஆனால் மறைமுகத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது அந்த வேட்பாளர்களுக்குத் தங்களது தொகுதிகளில் (வார்டுகளில்) மட்டும்தான் என்ன பிரச்சினை என்று தெரியும். மற்ற வார்டுகளில் அறிமுகம் இல்லாதவராக இருப்பார்கள். இந்தக் கட்டத்தில் மக்களின் பிரச்சினை என்ன என்பது தெரியாது, என விளக்கினார்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திணறிய கட்சிகள் - ஒரு பார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.