ETV Bharat / city

மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Apr 25, 2022, 2:25 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத அடையாளங்களுடன் ஆடை
மத அடையாளங்களுடன் ஆடை

சென்னை: இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "பள்ளி மாணவர்களிடம் வேறுபாடுகளை களையும் நோக்கில் கடந்த 1960ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுசம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை. ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ, மாணவிகள் அணிந்து வருகின்றனர். இது சீருடை விதிகளுக்கு எதிரானது.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும். கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போல தமிழ்நாட்டில் ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என் மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.