ETV Bharat / city

2021ஆம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

author img

By

Published : Jan 2, 2022, 2:34 PM IST

தமிழ்நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 325 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், ஆயிரத்து 117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அனைத்து காவல் துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "2021ஆம் ஆண்டு பல்வேறு சவால்களை தமிழ்நாடு காவல் துறை வழக்கம்போல் தைரியமாக எதிர்கொண்டது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளோம்.

சட்டம் ஒழுங்கு திறம்பட பேணி காக்கப்பட்டது. குற்றப்புலனாய்வில் மெச்சத்தகும் வகைக்கில் இருந்தது. காவல் துறையின் பணி சிறப்பாக இருந்தது. இவை அனைத்திற்கும் காரணம் காவல் துறையிலுள்ள அலுவலர்கள், ஆண், பெண் காவலர்கள் தான். இவர்களின் அர்ப்பணிப்பும் அனைத்து சூழ்நிலையிலும் அரண்போல நின்றதாலேயே சாத்தியமானது.

தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய தொடர்பான கொலைகளில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதைபோல சாதி அரக்கனின் பெயரால் நடந்த கொலைகளில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் வடதமிழ்நாட்டில் பழிக்குபழி வாங்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை ‘ஆபரேசன் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் ஒடுக்கி வருகிறோம்.

கருணை அடிப்படையில் பணி

அதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டு 3ஆயிரத்து 325 ரவுடிகளை கைது செய்துள்ளோம். ஆயிரத்து 117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். போதைப் பொருளுக்கு எதிராக ‘drive against drugs (DAD)’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளோம். கரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு 139 காவல் துறையினரை இழந்துள்ளோம்.

இத்தகைய கடினமான பணிச் சூழலில் தமிழ்நாடு அரசு காவல் துறையினருக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கியும், காவல் துறையினரின் தங்கும் குடியிருப்பை 750 சதுர அடியாக உயர்த்தியும், காவல் துறையினரின் துறை ரீதியிலான நடவடிக்கைகளை ரத்து செய்தும் உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் துறையினரின் ஆயிரத்து 67 வாரிசுகளுக்குத் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிபெற்று கொடுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையின் பேரில் ஆயிரத்து 500 பேருக்கு காவல் துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

மனித நேயத்துடன் பழகும் காவல் துறை

தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இந்த காலகட்டத்தில் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ள 989 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் காவல் துறையின் அடையாளத்தை மாற்றுவார்கள். அதைப்போல பொதுமக்களிடம் மனித நேயத்துடன் பழகுவார்கள் என நம்புகிறேன்.

பொதுமக்களின் மத்தியில் சில காவல் துறையினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கின்றன. நடந்த குற்றங்களை வழக்குப்பதிவு செய்யவில்லை எனப் புகார்கள் வருகின்றன.

முழுமையான ஒருமைப்பாடு, தனிப்பட்ட தைரியம், கண்டிப்பான முகம், தொழில் ஒழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மாதிரியாக வழிநடத்துவது ஒவ்வொரு பிரிவு அலுவலரின் பொறுப்பாகும்.

தவறான பரப்புரை

தமிழ்நாடு காவல் துறையின் கண்ணியம் குறையும் வகையில் அலுவலர்கள் ஒருவரும் செயல்படக்கூடாது. இந்தாண்டு கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள்கள் விற்பது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள், சைபர் கிரைம் குற்றங்கள், குறிப்பிட்ட சவாலாக இருக்கும்.

குற்றங்கள், குற்றவாளிகளிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். காவல் துறையினருக்கு எதிராக தவறான பரப்புரைகளுக்கு எதிராக செயல்படுவோம். இதயத்தில் எந்தக் கெடுதலும் இன்றி, நமது திறமையினாலும் அறிவினாலும் போரிடுவோம்.

எல்லா இடங்களிலும் எப்போதும் அமைதி, அமைதியை உறுதிப்படுத்தும் எங்கள் பணிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாடு காவல் துறைக்கு தலைமை தாங்குவது பெருமைக்குரியது. புத்தாண்டு தற்சமயம் நிறைய எதிர்பார்ப்புகளோடும், மகத்தான நம்பிக்கையோடும் எதிர்கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவின் செயலியில் 3.5 லட்சம் சிறார்கள் முன்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.