ETV Bharat / city

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது

author img

By

Published : Aug 7, 2022, 9:36 AM IST

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்த சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி சென்னையை சேர்ந்த சிவனடியார் கோபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharatபெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது
Etv Bharatபெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்றவேண்டும் என சர்ச்சையான வகையில் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் கனல் கண்ணன் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கனல் கண்ணனை தேடி வருகின்றனர்.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல தரப்பு கருத்து மோதல்கள் மற்றும் சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில், சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரியார் சிலை குறித்து சர்ச்சையான வகையில் கருத்து வெளியிட்டதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாகவும் பிருங்கி மலை கோபால் என்பவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த சையது அலி என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்து விசாரித்த போது, S.J.கோபால் மவுண்ட் கோபால் (எ) சிவனடியார் கோபால் (எ) பிருங்கி மலை கோபால் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சையான வகையில் பதிவிட்டு இருந்ததும், ஒரு பிரிவினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததும் தெரியவந்தது.

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது
பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது

மேலும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாகவும், அரசுக்கு எதிராக குற்றம் செய்யும் வகையில் மக்களை கலகம் செய்ய தூண்டும் விதமாகவும் அவர் பதிவிட்டதாக தெரிய வந்தது. கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பதிவுகளை பதிவிட்டுள்ளதும் தெரிய வந்ததையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் சமூக வலைதளங்களில் அத்தகைய பதிவுகளை பதிவிட்டு, பதற்றத்தை உருவாக்குவதை தடுக்கும் வகையில் நேற்று (ஆக. 6) கோபாலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ட்விட்டர் பக்கத்தில் இவர் தன்னை "பிருங்கிமலை ஓம் ஸ்ரீலஸ்ரீ சிவகோபால் சாமிகள்" என்று பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பதிவிட பயன்படுத்திய மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில், அவர் ஏற்கனவே கடந்த 202ஆம் ஆண்டு மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.