ETV Bharat / city

களேபரமான கல்யாண வீடு: போதையில் குத்தாட்டம்... 3 பேருக்கு கத்திக்குத்து!

author img

By

Published : Sep 11, 2021, 8:12 AM IST

Updated : Sep 11, 2021, 8:20 AM IST

திருமண மண்டபத்தில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நடனமாடுவதில் மோதல்
நடனமாடுவதில் மோதல்

சென்னை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன், மணமகள் வீட்டாரைச் சேர்ந்த இருதரப்பினரும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருதரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர் மண்டபத்தின் கழிவறைப் பகுதியில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஒருதரப்பினர் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து எதிரில் இருந்தவர்களை வெட்டியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் தினேஷ், யுவராஜ், ஹேமந்த ஆகிய மூன்று பேருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மேலும் சம்பவத்தில் கத்தியை எடுத்துத் தாக்கியது தொடர்பாக ஆகாஷ், ஜான், தோத்து என்கிற வினோத், லொட்ட வசந்த் ஆகிய நான்கு பேரையும் பிடித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருதரப்பினரும் வரவேற்பு நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தண்டையார்பேட்டை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மஜக மாநில நிர்வாகி படுகொலை: தேடுதல் வேட்டையில் 3 தனிப்படை

Last Updated :Sep 11, 2021, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.