ETV Bharat / city

ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

author img

By

Published : Apr 20, 2022, 3:08 PM IST

அதிமுக ஆட்சியில் ஆளுநர், இந்தியத் தேர்தல் அலுவலர், பெண் ஐஏஎஸ் போன்றோர் மீது தாக்குதல் நடைபெற்றதைப்போன்று, தற்போது நடைபெறாது என்றும்; ஏனென்றால் இது திமுக ஆட்சி என்றும்; பாதுகாப்பில் எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்.19) மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க காரில் சென்றார். அப்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரிக்கு அருகே வடகரை சாலையில் கார் சென்ற போது சிபிஐ மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்டச் செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 75 பேர் கையில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளுநர் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, தமிழ்நாடு காவல் துறை விளக்கம் அளித்த நிலையில், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழ்நாடு காவல் துறை டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார்.

'உண்மை இல்லை': இந்நிலையில், மயிலாடுதுறை ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அளித்த பதில், "ஆளுநர் நேற்று (ஏப். 19) மயிலாடுதுறை சுற்றுப்பயணத்தின்போது, அவரது கார் மீது கற்கள், கொடி வீசப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

மேலும், ஆளுநரின் சுற்றுப்பயணத்தில் அவரது பாதுகாப்பு வாகனத்தின் மீது எந்தவித கற்களோ, கொடியோ வீசப்பட்டு பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என கூடுதல் டிஜிபி அறிக்கை அளித்துள்ளார். மேலும், ஆளுநரின் பாதுகாப்புத் துறை அதிகாரியும், டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்

'எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையானது': ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து தெரியாது எனக்கூறிய முன்னாள் முதலமைச்சர், தற்போது சட்டம் - ஒழுங்கு குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஆளுநர் மீது தூசு கூடவிழவில்லை: கடந்த 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆளுநராக இருந்த சென்னாரேட்டி, கார் திண்டிவனம் அருகே அதிமுகவினரால் பறிக்கப்பட்டு அவரது கார் மீது கற்கள், முட்டை, தக்காளி போன்றவை வீசப்பட்டன.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என். சேஷன் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம், அவர் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது அதனையும் முற்றுகையிட்டு அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம், சுப்பிரமணிய சுவாமி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவினர் நடத்திய தாக்குதல், பெண் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள்,கடந்த அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றன.

நேற்றைய ஆளுநர் சுற்றுப்பயணத்தின்போது அவர் மீது ஒரு தூசு கூட விழவில்லை. எனவே, ஆளுநர் மீது நடக்காத ஒரு தாக்குதலை, நடந்ததாகக் கூறி அரசியல் செய்யக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆளுநரை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது. ஏனென்றால், இது திமுக ஆட்சி" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.