ETV Bharat / city

விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர் ரங்கசாமி

author img

By

Published : Aug 26, 2021, 9:25 PM IST

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி
முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.26) தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி மாநில வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ. 9 ஆயிரத்து 924 கோடியே 41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முதலமைச்சர் ரங்கசாமி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 6 ஆயிரத்து 190 கோடி ஆகும். மாநில பேரிடர் நிவாரணம் ரூ.5 கோடியையும் சேர்த்து, ஒன்றிய அரசின் நிதி உதவி ஆயிரத்து 729 கோடியே 77 லட்சம் ரூபாயாக இருக்கும்.

வெளிச்சந்தையில் நிதி திரட்ட அனுமதி

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, ஆயிரத்து 684 கோடியே 41 லட்சத்தை வெளிச்சந்தையில் திரட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரி அரசின் நிதி ஆதாரங்களில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு நடப்பாண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 10 விழுக்காடு நிதி உயர்த்தி வழங்கப்படும். மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக 2021 மசோதா அறிமுகம் செய்யப்படும்.

விவசாய பயிர்க் கடன்கள் தள்ளுபடி

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தனியார் பங்களிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய பயிர்க் கடன் பெற்று, திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

புதுச்சேரியை கல்வியறிவு பெற்ற மாநிலமாக உருவாக்க, ரூ.742 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து தெரு மின் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம், ரூ. 30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்” என்றார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து முடித்த பிறகு, சட்டசபை கூட்டத்தொடரை நாளை காலை 9.30 மணிக்கு பேரவைத் தலைவர் செல்வம் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் : கூட்டுறவு பயிர் மற்றும் கல்விக்கடன்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.