ETV Bharat / city

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை மாற்றாவிட்டால் பள்ளியை மூடும் போராட்டம்!

author img

By

Published : Apr 19, 2022, 10:15 PM IST

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை, கல்வி கட்டண நிர்ணய குழு மாற்றித் தராவிட்டால் பள்ளிகளை ஒரு வாரம் மூடும் போராட்டம் நடத்தப்படும் என அக்கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

செயலாளர் நந்தகுமார்
செயலாளர் நந்தகுமார்

சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியத்திடம் கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் நந்தகுமார், 'தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் செலவுகள் குறித்து அறிக்கையை அளித்தாலும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு ரூ.1,500 என கட்டணத்தை நிர்ணயம் செய்து அளிக்கின்றனர். இதனால், பள்ளிகளை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.

தனியார் பள்ளி கட்டணத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்
அரசு பள்ளிகளுக்கு நிகரான கட்டணம் விதிக்கவும்: பள்ளி ஆசிரியருக்கு சம்பளம், அரசுக்கான வரிகளை செலுத்தி வருகிறோம். மேலும், தனியார் பள்ளிகள் அரசிற்கு எந்தவித செலவும் இல்லாமல் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறோம்.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டிற்கு ஆகும் செலவினை தனியார் பள்ளிக்கும் கட்டணமாக நிர்ணயம் செய்து சமமாக அளிக்க வேண்டும். சமச்சீர் கல்வி என கூறியதுபோல், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே சமமான கட்டணத்தை நிர்ணயம் செய்து அளிக்க வேண்டும்.
கல்விக் கட்டணக் குழு தனியார் பள்ளிகளில் கட்டணத்தை மாற்றித்தராவிட்டால், தனியார் பள்ளிகளை ஒரு வாரம் மூடும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசு வேண்டுமானால் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டு எங்களுக்கான வாடகை மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்கட்டும்.
கட்டணம் குறைவாக உள்ளதால் பள்ளியை நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.