ETV Bharat / city

முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீதும் ஊரடங்கை மீறி சுற்றியதாக 1,040 பேர் மீதும் வழக்குப்பதிவு

author img

By

Published : Jan 10, 2022, 7:04 PM IST

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியமின்றி சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

case registered against the violators of the curfew in TamilNadu
case registered against the violators of the curfew in TamilNadu

சென்னை: சென்னையில் நேற்று (ஜனவரி 09) முழு ஊரடங்கின்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுளதாக சென்னை காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கின்போது 312 வாகன தணிக்கைச் சாவடிகள் அமைத்து, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, பகல் நேரங்களிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், கடைத் தெருக்கள் போன்ற இடங்களில் பின்பற்றுவது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாநகரம் முழுவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் வழக்குப்பதிவு

தீவிர கண்காணிப்பில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக 1,040 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 98 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 1,112 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 40 இலகுரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,205 வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 29 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு இதர வாகனம் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

case registered against the violators of the curfew in TamilNadu

அவசர உதவி எண்கள்

மேலும், பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்த ஆலோசனைகள் பெற சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ள 9498181239, 9498181236, 7200706492 மற்றும் 7200701843 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளும்படியும், அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் காவல் துறையின் உதவி எண்ணான 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளும்படியும் சென்னை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அரசுக்கும், காவல் துறைக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் அவசரத் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்கும்படியும் சென்னை காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தள்ளிப்போன வலிமை: 'மனசு ரொம்ப வலிக்குது' - ரசிகர்கள் வேதனை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.