ETV Bharat / city

அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!

author img

By

Published : Sep 30, 2020, 3:46 PM IST

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளதாகவும், இந்த விதிகளை பின்பற்றும்படி அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை (Deemed) பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

All India Council against for Cancellation of Arrear exams
All India Council against for Cancellation of Arrear exams

சென்னை: அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கலை-அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும விதிகளுக்கு முரணானது.

கரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு தேர்வு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கூறியுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளதாகவும், இந்த விதிகளை பின்பற்றும்படி அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை (Deemed) பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.