ETV Bharat / city

போலி பாஸ்போர்ட்டில் சென்னையிலிருந்து இலங்கை செல்ல முன்ற பெண் கைது

author img

By

Published : Feb 6, 2022, 6:24 AM IST

1977ஆம் ஆண்டு 19 வயதில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கை பெண் 48 ஆண்டுகளுக்குப் பின்பு 67 வயதில் இந்திய பாஸ்போா்ட்டில் சென்னையிலிருந்து இலங்கை செல்ல முயன்றபோது குடியுரிமை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை செல்ல முன்ற பெண் கைது
இலங்கை செல்ல முன்ற பெண் கைது

சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (69). இவருக்கு 19 வயதாக இருக்கும்போது, 1977ஆம் ஆண்டில் இலங்கை பாஸ்போா்ட்டில் சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு, இலங்கை திரும்பாமல் தமிழ்நாட்டில் கோவையில் நிரந்தரமாகத் தங்கி இருந்தாா்.
அதைத் தொடர்ந்து அவருக்கு, கோவை ஆா்எஸ்புரத்தை சேர்ந்த இந்தியரான அய்யாக்கண்ணு என்பவருக்கும், சரோஜினிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதன்பின்பு சரோஜினி தனது நாடான இலங்கைக்கு போகாமல், இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

போலி ஆவணங்களில் குடியுரிமை

சரோஜினி இந்தியரைத் திருமணம் செய்து கொண்டதோடு, இலங்கை பிரஜை என்பதை மறைத்து, இந்தியர் என்ற போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் வாங்கி விட்டாா். சரோஜினி 48 ஆண்டுகளாகத் தாய்நாடான இலங்கை செல்லாமல் இந்தியாவிலேயே வசித்து வந்தார்.

சரோஜினிக்குத் தனது நாடான இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சென்னையிலிருந்து இலங்கை செல்வதற்காக நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார். காலை 11.30 மணிக்கு இலங்கை கொழும்பு நகருக்குச் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து உள்ளே வந்தார்.

பல கோணங்களில் விசாரணை

சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட சரோஜினி, இந்திய பாஸ்போா்ட்டில் இலங்கை செல்ல வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அலுவலர்கள் விசாரணையில், தான் இலங்கையில் பிறந்தவராக இருந்தாலும், இந்தியரைத் திருமணம் செய்ததால், இந்தியர் என்று வாதிட்டார். ஆனால், குடியுரிமை அலுவலர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து சரோஜினியின் இலங்கை பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அலுவலர்கள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

அதோடு கியூ பிரிவு காவல்துறை, மத்திய உளவுப் பிரிவு காவல்துறையும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது சரோஜினி முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதையடுத்து நேற்றுமுன் தினம் பிப்.4ஆம் தேதி இரவு குடியுரிமை அலுவலர்கள் சரோஜினியைக் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, அதன் பின்பு சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் பிப்.5ஆம் தேதியான நேற்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்து, சரோஜினியை சென்னையில் உள்ள தங்களுடைய அலுவலகத்திற்குக் கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு: டிஜிபி அலுவலகத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.