ETV Bharat / city

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப்பள்ளிகள் தொடக்கம்

author img

By

Published : Sep 5, 2022, 7:57 PM IST

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப்பள்ளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்கம்
தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்கம்

சென்னை: பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் இன்று (செப். 5) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் முதல்முறையாக 26 தகைசால் பள்ளிகளையும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப்பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகைசால் பள்ளிகள் (Schools of Excellence) மாணவர்களின் கற்றலுக்கும், திறன் வெளிப்பாட்டிற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அவர்கள் பயிலும் பள்ளிகளில் உள்ள வசதிகளும், ஆசிரியர்களும், பள்ளித் தலைமையும்தான்.

மாணவர்கள் அடையவேண்டிய இலக்கையும் செல்லும் திசையையும் உறுதிசெய்தல், திறன்களை வளர்த்துக்கொள்ள வசதிகளை ஏற்படுத்தித் தருதல், ஆசிரியர் மாணவர் இடையே பிணைப்புடன் கூடிய கற்றல் – கற்பித்தல் ஆகியவை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணிகள் ஆகும்.

எந்தெந்த மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள்: இந்த இலக்கை அடைய, பாடத்திட்டம் மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வி பள்ளிகளில் தேவைப்படுகிறது. நேரிடையாகவும், இணைய வசதிகளைப் பயன்படுத்தியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகின்ற பல்வேறு பயிற்சிகளின் விளைவாகவும் வருங்காலத்தில் மாணவர்கள் பெருமளவில் பலனடைந்து முன்னேற்றம் காண்பார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தினை மேலும் உயர்த்துவதற்காக, முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் – பூந்தமல்லி, காமராஜ் நகர்; சென்னை மாவட்டம் – தியாகராய நகர், அசோக் நகர்; காஞ்சிபுரம் மாவட்டம் – பெரிய காஞ்சிபுரம்; செங்கல்பட்டு மாவட்டம் – காட்டாங்கொளத்தூர், நந்திவரம்; ராணிப்பேட்டை மாவட்டம் – ஆற்காடு;

வேலூர் மாவட்டம் – வேலூர்; திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டாறம்பள்ளி, வாணியம்பாடி; தர்மபுரி மாவட்டம் – தர்மபுரி; விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம்; சேலம் மாவட்டம் – சேலம் நகரம், குகை; ஈரோடு மாவட்டம் – ஈரோடு; நீலகிரி மாவட்டம் – கூடலூர்; கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர்; திண்டுக்கல் மாவட்டம் – பழனி; கரூர் மாவட்டம் – குளித்தலை; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருச்சிராப்பள்ளி; கடலூர் மாவட்டம் – கடலூர்; நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம்; தஞ்சாவூர் மாவட்டம் – பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் – திருபுவனம்; மதுரை மாவட்டம் – மதுரை தெற்கு; தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – திருநெல்வேலி; கன்னியாகுமரி மாவட்டம் – அகஸ்தீஸ்வரம்; கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி; திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.

மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவும், வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்தவும் இந்தப் பள்ளிகள் தளமாக விளங்கும்.

தகைசால் பள்ளியின் சிறப்புகள்: இலக்கை உணர்ந்துகொள்வதற்கான வலுவான அடித்தளமிடும் வகையிலும், கற்றலுக்கேற்ற வகையிலும் தகைசால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கேற்ப நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும்.

மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட இடைவேளைகளில் நடக்கும் மதிப்பீட்டு முறைகளையும், ஆண்டு இறுதியில் நடக்கும் மதிப்பீட்டு முறைகளையும் மேற்கொள்ள வசதியாக ஸ்மார்ட் வகுப்பறைகள் எனப்படும் திறன் வகுப்பறைகளும், தமிழ்நாட்டின் தனித்துவமாக விளங்கும் இணைய வசதியோடு கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் இப்பள்ளிகளில் ஏற்படுத்தப்படவுள்ளன.

தகைசால் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள், பல்துறை வல்லுநர்கள் பங்கேற்று உரையாடும் கோடை முகாம்கள், பல்வேறு கலைகளில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு கற்றலின் மகிழ்வை அடைய வழிவகை செய்யப்படும்.

ஆசிரியரின் திறமைகளும், வெளிப்பாடுகளும் மாணவர்களின் முன்னேற்றத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளதால், ஆசிரியர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய ஊக்குவிக்கப்படுவர். மேலும், அவ்வகுப்புகளில் துறைசார் நிபுணர்களும், தொழிற்துறை வல்லுநர்களும் பங்கேற்று அவர்களோடு கலந்துரையாடுவர்.

நாட்டின் முக்கியமான நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிடவும் வழிவகை செய்யப்படும். இத்தகைசால் பள்ளிகளில், பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகைசால் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல், கலைகள், நாடகங்கள், இசை போன்றவற்றை அரங்கேற்ற பெரிய அரங்கமும், அவற்றைக் கற்றுத் தர ஆசிரியர்களும், விளையாட்டுத் துறைக்கென உடற்பயிற்சி ஆசிரியர்களும், நூலகர்களும் பணியமர்த்தப்படுவர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கப்படும்: அனைத்து வசதிகளும் கொண்ட நூலகம் மற்றும் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் சிறந்த நூலகர்கள் வாயிலாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மேம்படுத்தப்படும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சியாளர்கள் வாயிலாக அவர்களுடைய விளையாட்டுச் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை உண்டாக்கி அவர்களது மனநலமும், உடல்நலமும் பேணப்படும்.

கலைகள், நாடகங்கள் மற்றும் இசை ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெளிப்பாட்டுத்திறனும் வளர்க்கப்படும். இவற்றோடு மெய்நிகர் டிஜிட்டல் உலகத்தோடு போட்டியிடும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். இத்திட்டம் வருங்காலத்தில் படிப்படியாக அனைத்து மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் - STEAM) சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

15 அரசுப் மாதிரி பள்ளிகள்: அந்த வகையில், இந்த கல்வியாண்டிற்கு சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்படுகின்றன.

அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்களின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உட்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வி நிபுணர்கள் குழுவால் மாதிரிப் பள்ளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கற்றல் மேலாண்மை அமைப்பை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, மாதிரிப் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவரின் ஒட்டுமொத்த ஆளுமையை மெருகேற்றி இணை கல்விச் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மாதிரிப் பள்ளிகள் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் திறன் மற்றும் மனோ தத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்வது பற்றிய ஆழமான விழிப்புணர்வை வளர்ப்பதற்கு ஒரு தனித்துவமான தொழில் வழிகாட்டுதல் வாய்ப்பினையும் வழங்குகிறது”, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், அமைச்சர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணா நூற்றாண்டு நூலகம் நாட்டின் பெருமை... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.