ETV Bharat / business

சேமிப்புக்கு பொன்னான வாய்ப்பு! - வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு

author img

By

Published : Dec 31, 2022, 12:01 PM IST

மூத்த குடிமக்கள் மற்றும் முதலீட்டு ஆர்வலர்களுக்கு புத்தாண்டு பரிசாக அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு
வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு

டெல்லி: மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக்குறிப்பின் படி சேமிப்பு பத்திரங்கள் மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 1.1 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட வட்டி விகிதம் ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை அமலில் இருக்கும்.

இதில் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்படாமல் முறையே 7.1 மற்றும் 7.6 சதவீதமாக உள்ளன.

வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு
வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின்படி, அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஓராண்டு திட்டத்திற்கான வட்டி 5.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாண்டு சேமிப்பு திட்டத்தில் 6.8 விழுக்காடு வட்டி கிடைக்கும் 3 ஆண்டு டெபாசிட்டில் 6.9 விழுக்காடு வட்டி கிடைக்கும். 5 ஆண்டு திட்டத்திற்கு 7 விழுக்காடு வட்டி கிடைக்கும்.

மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen) சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.2 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பத்திரத்திற்கான முதிர்வுக்காலம் 123 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதாந்திர வருவாய் திட்டத்திற்கான வட்டி விகிதம் 0.4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 7.1 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடர்கிறது. 2022ம் ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 5 முறை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

பொதுவாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக 9 காலாண்டுகளாக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மாற்றப்பாடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி? - நிபுணர்கள் டிப்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.