ETV Bharat / business

இந்தியா வரும் டெஸ்லா கார்... சீனாவுக்கு ஈடு கொடுக்குமா?

author img

By

Published : Mar 17, 2019, 2:32 PM IST

விரைவில் இந்தியாவில் கார் உற்பத்தியைத் தொடங்க ஆர்வமுடன் உள்ளதாக டெஸ்லா நிறுவன தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மாதிரிப் படம்

இந்தியாவும் கார் உற்பத்தியும்

கார் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பாக சென்னையைச் சுற்றி பல்வேறு நிறுவனங்களின் ஆலைகள் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு சென்னையில் ஒரு கார் தயாரிக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய கார் உற்பத்தியில் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியா விளங்கினாலும், இ-கார் என்று அழைக்கப்படும் மின்சாரக் கார்கள் தயாரிப்பில் இந்தியா பின் தங்கியுள்ளது.

ஏன் மின்சாரக் கார்கள்

குறைந்துவரும் எண்ணெய் வளங்கள் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகையால் வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இதனால் அவை அதிக அளவில் விற்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும்.

முன்னே செல்லும் சீனா

ஏறக்குறைய ஒரே அளவில் மக்கள் தொகை கொண்ட சீனாவில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்சாரக் கார்கள் உள்ள நிலையில், இந்தியாவிலோ வெறும் ஆறாயிரம் மின்சாரக் கார்களே உள்ளன.

இந்தியா வருமா டெஸ்லா?

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் செய்து அனைவரது புருவங்களையும் உயர்த்தவைக்கிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெஸ்லாவை இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையைத் தொடங்கவைக்க மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சி செய்துவருகிறது.

ஆனால் அரசின் நடைமுறைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் உற்பத்தி ஆலை அமைக்க தடையாக விளங்குவதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவிற்கு வர ஆர்வமுடன் உள்ளதாகவும், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையைத் தொடங்கிவிடுவேன் எனவும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.