ETV Bharat / business

விமான எரிபொருள் விலை கடும் சரிவு!

author img

By

Published : May 3, 2020, 1:30 PM IST

Updated : May 3, 2020, 6:48 PM IST

டெல்லி: விமான பயணம் முற்றிலும் முடங்கியுள்ளதால் விமான எரிபொருளின் விலை 23.2 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது.

ATF price cut
ATF price cut

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

தேவை குறைந்துள்ளதால் விமான எரிபொருளின் விலை கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. தற்போது விமான எரிபொருளின் விலை டெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,812.62 (23.2 விழுக்காடு) சரிந்து 22,544.75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் இதே விமான எரிபொருளின் விலை 64,323.76 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதத்திற்குப் பின் விமான எரிபொருள் விலை சரிவது இது ஏழாவது முறையாகும். இந்தச் சரிவினால் டெல்லியில் விமான எரிபொருளின் விலை பெட்ரோல் டீசல்களின் விலையைவிடக் குறைவாக உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ. 69.59-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை தற்போது ரூ. 22.54 ஆக உள்ளது.

விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்திக்கொண்டாலும் எரிபொருளின் விலை சந்தையின் நிலைமைக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளதன் நன்மைகள் விமான நிறுவனங்களுக்குச் சென்று சேரும்வகையில், தற்போது விமான எரிபொருளின் விலை 15 நாளுக்கு ஒரு முறை அறிவிக்கப்படுகிறது. முன்பு விமான எரிபொருளின் விலை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துவருவதால் மார்ச் 16ஆம் தேதிமுதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவந்தாலும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்காமல் விமான நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் விமான எரிபொருளின் விலை மட்டும் தொடர்ந்து குறைக்கப்பட்டுவருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கும் சாம்சங்

Last Updated :May 3, 2020, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.