ETV Bharat / briefs

மதுரையில் ஜூன் 24ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு!

author img

By

Published : Jun 22, 2020, 11:49 PM IST

Updated : Jun 23, 2020, 11:35 AM IST

மதுரை: நாளை முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

மதுரை கரோனா
மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தில் ஜூன் 24 முதல் 30ஆம் தேதிவரை ஏழு நாள்கள் முழு ஊரடங்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மதுரை மாநகராட்சிப் பகுதிகள், பரவை, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில், "ஊரடங்கு காலத்தில், மருத்துவமனைகள், மருந்து ஆய்வகங்கள், மருந்துக் கடைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டும் செயல்படும். ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை.

அதே நேரத்தில் ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் செல்லலாம். ரயில்வே, விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி உண்டு. இதற்கு, அதில் பயணிப்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும்.

மாநில அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு ஊழியர்களுடன் மட்டும் செயல்படும். சுகாதாரம், குடும்பநலத் துறை, காவல் துறை, வருவாய், பேரிடர் துறை, மின்சாரம், கருவூலத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத் துறை, உணவு நகர்வோர் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தேவைக்கு ஏற்ப செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கும். அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கு அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். வங்கிகள் 33 விழுக்காடு ஊழியர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏடிஎம், வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்க அனுமதியுண்டு.

பொது விநியோகக் கடைகள் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் செயல்படாது. அங்கு வீடுகளுக்கே வந்து பொருள்கள் வழங்கப்படும்.

காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி உண்டு. நடமாடும் காய்கறிக் கடைகள் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம். மக்கள் வீடுகளிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க வேண்டும்.

உணவகங்களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை பார்சல் உணவுக்கு மட்டும் அனுமதி உண்டு. தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்பட அனுமதி உண்டு.

வரும் 28ஆம் தேதி எந்தவித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அம்மா உணவகங்கள், சமுதாய கூடங்கள் செயல்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

Last Updated :Jun 23, 2020, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.