ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

author img

By

Published : Oct 30, 2020, 12:58 PM IST

Updated : Oct 30, 2020, 2:22 PM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

12:56 October 30

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.30) ஒப்புதல் அளித்துள்ளார்.
 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கோரி, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.

ஒப்புதலுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையிலும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர். 

அதைத்தொடர்ந்து திமுக  தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆளுநர் தரப்பில் அளித்த பதிலில், மசோதா தொடர்பாக முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரை சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மசோதா தொடர்பாக முடிவெடுப்பது குறித்து ஆளுநரின் பதிலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசாணையை நேற்று (அக்.29) தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று (அக்.30) மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இளங்கலை படிப்புகளில், உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதா-2020க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் சட்ட பூர்வமான கருத்திற்காக, செப்டம்பர் 26 ஆம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிததிற்கு சொலிசிட்டர் ஜெனரல் நேற்று(அக்.29) பதில் அனுப்பியிருந்தார். அவரின் பதில் கிடைத்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated :Oct 30, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.