ETV Bharat / city

ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

author img

By

Published : Jan 27, 2022, 7:48 PM IST

Updated : Jan 27, 2022, 9:38 PM IST

Tamil Nadu government orders cancellation of night curfew
Tamil Nadu government orders cancellation of night curfew

19:40 January 27

சென்னை: தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நாளை(ஜன.28) முதல் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜன.27) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உயர் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பிப்ரவரி 15ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

* சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

* நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

* மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

* பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.

* அரசு, தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கு அனுமதி இல்லை.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* திருமணம் , சுப நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

* துணிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.

*அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

*அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks), நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து, கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

* தற்போது கரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கம்

* தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை கடைபிடிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு நாளை(ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்களில் அனுமதி

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மக்கள் வழிபடுவதற்காகத் திறக்கப்படுகிறது

Last Updated :Jan 27, 2022, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.