ETV Bharat / state

Helicopter Crash: பிபின் ராவத் உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

author img

By

Published : Dec 8, 2021, 1:21 PM IST

Updated : Dec 8, 2021, 11:05 PM IST

MI v175 helicopter crash
MI v175 helicopter crash

18:08 December 08

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் - அதிகாரப்பூர்வத் தகவல்

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்துவிட்டதாக இந்திய விமானப் படை, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

17:10 December 08

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு கிளம்பிய முதலமைச்சர்

ஹெலிகாப்டர் விபத்தை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவைக்குத் தனி விமானம் மூலம் புறப்பட்டார். உடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவும் செல்கிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்து ஏற்பட்ட இடத்தையும், காயமுற்றவர்களையும் நேரடியாக பாா்வையிடுவதற்காக சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உயர் அலுவலர்கள் உதயச்சந்திரன், டேவிட்சன், தினேஷ்குமார், நிதின் ஜான், சதீஷ் ஆகியோரும் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி - குன்னூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

16:55 December 08

#HelicopterCrash: 13 பேர் உயிரிழப்பு எனத்தகவல்

ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவல் தெரிவித்துள்ளது.

16:16 December 08

ஹெலிகாப்டர் விபத்து: களத்தில் ஈடிவி பாரத் தமிழ்

களத்தில் ஈடிவி பாரத் நிருபர்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்தான முழுமையான விவரங்களைப் பதிவு செய்கிறார், ஈடிவி பாரத் தமிழ் நிருபர் நடேஷ் குமார்.

15:33 December 08

ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி

களநிலவரம்

ஹெலிகாப்டர் விபத்து நடக்கும்போது, அதனை நேரில் பார்த்த காட்டேரி மலைப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

14:53 December 08

குன்னூர் விரைகிறார் முதலமைச்சர்

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தர உள்ளார். மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முதலமைச்சர், மாலை 6 மணிக்கு கோவை விமானநிலையம் வந்தடைய உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல உள்ளார்.

14:33 December 08

ஹெலிகாப்டர் விபத்து: போனில் கேட்டறிந்த முதலமைச்சர்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்களுடன் தொலைபேசி வாயிலாக கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.

14:21 December 08

தற்போது, விபத்து நடந்த இடத்திற்குத் தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

13:15 December 08

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து

கோயம்புத்தூர்: சூலூரில் இந்திய விமானப்படை விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவப் பள்ளிக்குப் பயிற்சிக்காக ஐ.ஏ.எஃப். எம்ஐ-17V5 எனும் ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது.

குன்னூர் காட்டேரி பகுதியில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு ஹெலிகாப்டரில் தீப்பிடித்துள்ளது. இது தொடர்பாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஹெலிகாப்டரில் மொத்தம் 14 பேர் சென்றதாகக் கூறப்படுகிறது. அதில், 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் பயணம் செய்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. விபத்து குறித்து உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 8, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.