ETV Bharat / bharat

நாயகன் மீண்டும் வரார்! மீண்டும் பணியை துவங்குமா விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர்! ஆவலுடன் காத்திருப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 10:18 AM IST

Updated : Sep 22, 2023, 12:09 PM IST

WakeUP Vikram Lander, Pragyan Rover : நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் ஆய்வு பணிக்கு தயார்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Chandrayaan
Chandrayaan

ஐதராபாத் : நிலவின் தென் துருவத்தில் 14 நாட்களுக்கு பின் சூரியஒளி படர உள்ள நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் தன் ஆய்வைத் தொடங்குமா என எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடைசியாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தனது இலக்கை அடைந்தது.

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்யான் ரோவரும் நிலவில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், கந்தகம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்து தகவல் அனுப்பியது.

அதேபோல் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர் அதுகுறித்த தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்தது. நிலவில் 14 நாட்கள் சூரிய ஒளியுடனும், அடுத்த 14 நாட்கள் இருளாகவும் காணப்படும்.

அதுவும் இருள் காலங்களில் மைனஸ் 200 டிகிரிக்கு மேல் குளிர் நிலவும் எனக் கூறப்படுகிறது. நிலவில் 14 சூரிய நாட்களில் தொடர் ஆராய்ச்சி செய்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு சென்றது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சூரிய மின்சக்தியால் இயங்கக் கூடிய பேட்டரிகளை கொண்டு இருப்பதால் அவை முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டு உறக்க நிலைக்கு அதாவது ஸ்லிபிங் மோடுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதை தொடர்ந்து அடுத்த 14 நாட்கள் நிலவில் இருள் நிலவிய நிலையில், தற்போது மீண்டும் பகல் காலம் வந்து உள்ளது. இந்த 14 நாட்கள் கடும் குளிரை எதிர்கொண்டு உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் அதன் பணிகளை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இன்று (செப். 22) முதல் மீண்டும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் செயல்பாட்டை தொடங்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதன்படி பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை மீண்டும் கண்விழிக்க செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். அப்படி கண்விழிக்கும் பட்சத்தில் வழக்கம் போல் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலவின் தென்துருவத்தில் அதிகபட்சமாக நிலவும் 253 டிகிரி செல்சியஸ் குளிரில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் சோலார் பேனல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : Emden ship : 10 நிமிடங்கள்.. 130 குண்டுகள்.. சென்னையை கதிகலங்கச் செய்த எம்டன்.. 109 ஆண்டுகால வரலாற்றில் நடந்தது என்ன?

Last Updated :Sep 22, 2023, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.