ETV Bharat / bharat

சேவல் சண்டை: தடையை மீறி சேவல் சண்டை- அநியாயமாக பறிபோன இரு உயிர்கள்!

author img

By

Published : Jan 16, 2023, 6:15 PM IST

ஆந்திராவில் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டை பந்தயத்தில், சேவலின் பின்னங்கால் பகுதியில் கட்டப்பட்டு இருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் கிழித்ததில் இருவர் பலியாகினர். தடையை மீறி சேவல் சண்டைகளில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவல் சண்டை
சேவல் சண்டை

அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையில் ஏற்பட்ட களேபரத்தில் இருவர் உயிரிழந்தனர். பண்டைய காலம் தொட்டு வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை மற்றும் ஆட்டு சண்டை எனப்படும் கிடா முட்டு, ரேக்ளா ரேஸ், குதிரை வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தனி இடம் உண்டு.

பண நோக்கம், குடிவெறி, லஞ்சம், சூதாட்டம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு குடும்பங்கள் சீரழிவை சந்திப்பதை அடுத்து அரசு இவ்விளையாட்டுகளுக்குத் தடை விதித்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மட்டும் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது. அதேநேரம் பல்வேறு பகுதிகளில் அரசின் தடையை மீறி சேவல் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

குறிப்பாக ஆந்திராவில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றத் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது. காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலுரு, என்.டி.ஆர். மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அரசு தடையை மீறி சேவல் சண்டை களைகட்டியது. ஹைதராபாத், உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேவல் சண்டைகளில் கலந்து கொள்ள திரளானோர் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோடிக்கணக்கிலான ரூபாய் பந்தயங்களில் புரண்டதாகவும், தடையை மீறி நடைபெறும் போட்டிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு சேவல் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் இருவேறு இடங்களில் நடந்த சேவல் சண்டையில் இருவர் பலியாகினர். கிழக்கு கோதாவரி மாவட்டம், அனந்தபள்ளி பகுதியில் அத்துமீறி சேவல் சண்டை நடந்துள்ளது. சேவல் சண்டையைக் காண நல்லஜெர்லா மண்டல் பகுதியைச் சேர்ந்த பத்மராஜூ என்பவர் சென்று உள்ளார்.

திடீரென சண்டையில் இருந்து சேவல் பறந்து பார்வையாளர் கூட்டத்தில் புகுந்த நிலையில் அதன் பின்னங்கால் பகுதியில் கட்டப்பட்டு இருந்த கத்தி போன்ற ஆயுதம், பத்மராஜூவின் காலை கிழித்தது. அதிகம் ரத்தம் வெளியேறிய நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பத்மராஜூ கொண்டு செல்லப்பட்டுள்ளார். பத்மராஜூவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சம்பவம் காக்கிநாடா மாவட்டம், கிர்லாம்புடி மண்டல் பகுதியில் நடைபெற்றது. பந்தயத்தின் போது, சேவலை கட்ட முயன்ற அதன் உரிமையாளரான சுரேஷ் என்பவரின் கை மணிக்கட்டு பகுதியில் கூர்மையான ஆயுதம் கிழித்துள்ளது. அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், அவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவல் சண்டையால் இருவர் உயிரிழந்த நிலையில், தடையை மீறி நடைபெறும் பந்தயங்கள் மற்றும் அதனை நடத்தும் விழா கமிட்டியர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமோஜி ராவ்விற்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் கீரவாணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.