ETV Bharat / bharat

தெலங்கானாவில் 'கார்' வேகத்தை நிறுத்திய 'கை' - கேசிஆரின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:22 AM IST

Telangana election results: தெலங்கானாவில் தொடர்ந்து 9 ஆண்டு காலமாக ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சியை பின்னுக்கு தள்ளிய, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 60 இடங்களை கடந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30 அன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இந்த நிலையில், இம்மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே ஆட்சியிலிருந்து சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரியச் சமிதி (BSR) கட்சிக்கும் இந்த தேர்தல் பின்னடைவைத் தரலாம் எனக் கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி கம்மாரெட்டி சட்டமன்ற தொகுதியில் சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அங்கு அவர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

கம்மாரெட்டி, கஜ்வால் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட நிலையில் இரண்டு சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். கஜ்வாலில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் வேட்பாளரும் கிரிக்கெட் வீரரான அசாரூதின் ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், தெலங்கானாவில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் இம்முறை அதனை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தல் மூலம் தெலங்கானாவில் அதிக இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் என தெரிய வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி, பிஆர்எஸ் - 43, காங்கிரஸ் - 63, ஏ.ஐ.எம்.ஐ.எம் - 4, சிபிஐ ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. இதில் கொத்தகுடேம் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் குணம்நேனி சாம்பசிவ ராவ் முன்னிலை வகிக்கிறார்.

இதையும் படிங்க: Live Election Results: தெலங்கானாவில் ஆட்சியை இழக்கிறது பிஆர்எஸ்.. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.