ETV Bharat / bharat

'பசுமை காலநிலை நிறுவனம்' மூலம் தமிழ்நாடு நாட்டிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது - முதலமைச்சர்

author img

By

Published : Dec 5, 2022, 10:59 PM IST

இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் ’பசுமை காலநிலை’ போன்ற நிறுவனம் முன்னோடியாக உள்ளது என ஜி20 தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜி20 கூட்டத்தில் ஸ்டாலின் உரை
ஜி20 கூட்டத்தில் ஸ்டாலின் உரை

சென்னை: நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு உருவாக்கியுள்ள 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாடு தொடர்பாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பெரிய பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது‌.

அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சம நீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் நரேந்திர மோடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நம் பிரதமருக்கு, எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முழு விவரம்: குஜராத், ஹிமாச்சலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.