ETV Bharat / bharat

அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் முடிவு - இறுதிகட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம்!

author img

By

Published : Jan 5, 2023, 7:07 PM IST

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வார இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (ஜனவரி 6ஆம் தேதி) இரு தரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக
அதிமுக

டெல்லி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.என அணிகள் அதிமுகவில் உருவாகின. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டார். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேல்முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

மேலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

ஈ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் இருப்பதால் கட்சிப் பணிகள் தேக்கமடைவதாகவும், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாகவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, பொதுக் குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர், அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றார். தற்போது அதிமுகவின் அடிப்படை விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளதால் ஜனவரி 6ஆம் தேதி இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் - ஆளுநரால் வெடித்த சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.