ETV Bharat / bharat

'நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - நுபுர் சர்மாவை சாடிய உச்சநீதிமன்றம்

author img

By

Published : Jul 1, 2022, 11:51 AM IST

Updated : Jul 1, 2022, 1:11 PM IST

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

டெல்லி: நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித்தொடர்பாளர் நுபர் சர்மா மீது எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சேர்த்து டெல்லியில் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மா மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜுலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் சர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மா ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டதாக தெரிவித்தார்.

மதத்தின் மீது மரியாதை இல்லை: இதற்கு, "நீதித்துறை தொடர்பான விஷயங்களை பேச நுபுர் சர்மாவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியினருக்கும் என்ன வேலை?" என நீதிபதி சூரியகாந்த் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நீதிபதி,"செய்தித் தொடர்பாளர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. இவர்களுக்கு (தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நுபுர் சர்மா) எந்த மதத்தின் மீதும் மரியாதை இல்லை. ஒரு மதத்தின் மீது மரியாதை வைத்திருந்தால், அனைத்து மதங்கள் மீதும் இருக்க வேண்டும்.

இதுபோன்ற பேச்சு எதற்கு: எங்களிடம் கேட்டால், நுபுர் சர்மா பேச்சுகள் மலிவான விளம்பரத்திற்கும், மோசமான அரசியல் முன்னெடுப்புகளுக்கானவை என கூறுவோம். இதுபோன்ற கருத்துகளுக்கு என்ன தேவை. ஜனநாயகத்தில் புற்கள் வளரவும் உரிமை உள்ளது, அந்த புற்களை மக்கள் உண்பதற்கும் உரிமை இருக்கிறது. நுபுர் சர்மா மீண்டும் தொலைக்காட்சி முன் தோன்றி, நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

ஒருவரே பொறுப்பு: மேலும், "நீங்கள் யார் மீதாவது புகார் அளித்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். ஆனால், உங்களை கை வைக்க யாரும் முன்வர மறுப்பதை பார்க்கும் போது உங்கள் செல்வாக்கு என்ன என்று புரிகிறது. தற்போது நாட்டில் நிலவும் அசாதராண சுழல் அத்தனைக்கும், இந்த ஒற்றை பெண்மணியே (நுபுர் சர்மா) பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மனு தள்ளுபடி: மேலும், நுபுர் சர்மாவின் வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, டெல்லி போலீசாரிடம் கேள்வியெழுப்பினார். மேலும், நுபர் சர்மா அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, அந்தந்த மாநிலங்களின் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களை முறையிட உத்தரவிட்டதை அடுத்து, நுபுர் சர்மா தரப்பு தங்களது மனுவை திரும்பப்பெறுவதாக கூறியது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டார்.

நுபுர் சர்மாவின் கருத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த ஜூலை 28ஆம் ராஜஸ்தான் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்பவர் கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பூதாகரமாகியது மட்டுமில்லாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு ராஜஸ்தானில் 144 தடை உத்தரவு அமல்படுத்தும் அளவிற்கு தீவிரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு ஃபார்முலா... 8 ஆண்டுகளில் 7 மாநில ஆட்சி கவிழ்க்கப்பட்ட கதை...

Last Updated : Jul 1, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.