ETV Bharat / bharat

Rajya Sabha: டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

author img

By

Published : Aug 8, 2023, 6:48 AM IST

Updated : Aug 8, 2023, 7:08 AM IST

Delhi Ordinance Bill: டெல்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை(07.08.2023) நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகள், எதிராக 102 வாக்குகள் பெற்றதை அடுத்து மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லி அரசில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. காவல் துறை, பொது அறிவிப்பு, நில அதிகாரம் ஆகியவை தவிர, பிற துறைகளின் அதிகாரம் டெல்லி அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் டெல்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்ற முடிவு எடுக்கும் அதிகாரம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது. அவசர சட்டத்துக்கு மாற்றான டெல்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனிடையே இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தாா்.

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி, "அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது" எனச் சாடினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், "இந்த சட்டம் முழுமையாக அரசியலமைப்புக்கு எதிரானது என சட்ட அமைச்சகம் மற்றும் அதனை இயற்றும் அரசுக்கு நன்றாக தெரியும்" என்றார்.

இதையும் படிங்க: மணிப்பூர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்.. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க திட்டம் எனத் தகவல்!

அதனைத் தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ,"ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பாதிக்கும் இந்த மசோதா, சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாச்சிக்கு முற்றிலும் எதிரானது" என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

பின்னர், மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகள், எதிராக 102 வாக்குகள் பெற்றதை அடுத்து மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

  • VIDEO | Rajya Sabha passes Delhi Services Bill. 131 MPs vote in favour of the bill.

    (Source: Third Party) pic.twitter.com/X1dGlW10QV

    — Press Trust of India (@PTI_News) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜனநாயகத்தில் இன்று கறுப்பு நாள்: மசோதா தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், " ஜனநாயகத்தில் இன்று கறுப்பு நாள். 4 தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தோல்வியைத் தழுவியுள்ளதால் டெல்லியில் பின் வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர முயற்சி செய்கிறது. அதற்குத் தான் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் டெல்லியில் ஆம் ஆத்மியை பாஜகவால் தோற்கடிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்.. குறைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்.. மக்கள் ஆதரவு பெற்ற திட்டம் வீழ்ந்ததா?

Last Updated : Aug 8, 2023, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.