ETV Bharat / bharat

Punjab: ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொடூர கொலை செய்த கும்பல் - அதிர வைக்கும் பின்னணி!

author img

By

Published : Jun 30, 2023, 11:18 AM IST

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 4 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக ஒருவரை திட்டமிட்டு கொலை செய்து, நாடகமாடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

Punjab businessman
பஞ்சாப்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த சுக்ஜீத் சிங் என்ற நபரைக் காணவில்லை என அவரது மனைவி ஜீவன்தீப் கெளர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுக்ஜீத் சிங்கை தேடி வந்தனர்.

அப்போது, பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்புகள் கிடந்தன. அதனால், சுக்ஜீத் சிங் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். ஆனால், அந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், சுக்ஜீத்தின் செல்போன் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. அதனை மீட்ட போலீசாருக்கு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. குர்பிரீத் சிங் என்ற நபரும், அவரது கூட்டாளிகளும் இணைந்து இன்சூரன்ஸ் பணத்திற்காக சுக்ஜீத் சிங்கை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

போலீசாரின் தகவல்படி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி சிக்கலில் இருந்த குர்பிரீத் சிங், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்துள்ளார். இந்த சூழலில், இன்சூரன்ஸ் பாலிசிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி பண மோசடி செய்து வந்த அவரது நண்பர் ராஜேஷ் குமார் ஷர்மா பணம் சம்பாதிக்க குறுக்கு வழி ஒன்றை கூறியுள்ளார்.

அதன்படி, குர்பிரீத் சிங் 4 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அது தனிநபர் விபத்து காப்பீடு என்பதால், குர்பிரீத் சிங் விபத்தில் இறந்துவிட்டால், 4 கோடி ரூபாயை கிளைம் செய்து பெற்றுக் கொள்ளலாம். அதனால், குர்பிரீத் சிங் விபத்தில் இறந்தது போல நாடகமாட முடிவு செய்துள்ளனர். அதற்காக, குர்பிரீத் சிங், சுக்ஜீத் என்பவருடன் நட்பை வளர்த்துள்ளார். சுக்ஜீத்துடன் அடிக்கடி மது அருந்தியுள்ளார். பல மாதங்களாக சுக்ஜீத்துடன் நட்பாக பழகி வந்த குர்பிரீத் சிங், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய காத்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கடந்த ஜூன் 19ஆம் தேதி, சுக்ஜீத்துடன் இணைந்து மது அருந்திய குர்பிரீத் சிங், அவருக்கு புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் சுக்ஜீத் மயக்கமடைந்தார். அதன் பிறகு சுக்ஜீத்திற்கு குர்பிரீத் சிங்கின் உடையை அணிவித்துள்ளனர். பின்னர், அவரை சாலையில் போட்டு, டிரக்கை வைத்து ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது சுக்ஜீத் என்று கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக இரக்கமின்றி, முகத்தை சிதைத்து கொலை செய்தனர்.

அதன் பிறகு, சாலையில் கிடந்த சிதைந்த சடலம் தனது கணவர் குர்பிரீத் சிங்தான் என அவரது மனைவி போலீசாரிடம் அடையாளம் காட்டினார். இதையடுத்து இறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து, 4 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையை பெற்று, பிரித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாரின் விசாரணையில் இவர்களது சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. இறந்ததாக நாடகமாடிய குர்பிரீத் சிங்கை போலீசார் கண்டுபிடித்தனர். பிறகு, குர்பிரீத் சிங், அவரது மனைவி மற்றும் கூட்டாளிகளான சுக்விந்தர் சிங், ஜஸ்பால் சிங், தினேஷ் குமார், ராஜேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் சுமார் பத்து மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மகளின் காதலனை கொலை செய்ய தந்தை திட்டம்.. 6 பேர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.