ETV Bharat / bharat

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு - புதுவை முதலமைச்சர் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 12:27 PM IST

Puduchery Govt Announce Multi Grain Snacks to school Childrens
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி: அரசு கல்வித்துறை சார்பில் சர்வதேச ஆசிரியர்கள் தின விழாவானது கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மேலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். பின்னர் புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது. மேலும் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், நல்ல குடிநீர் வழங்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் மீண்டும் காலை உணவுத் திட்டத்தில் பாலுடன் சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கட் மற்றும் பழம் போன்றவை வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து, புதிய திட்டமாக மாலையில் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் சிறுதானிய உணவு வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள்.

மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். முக்கியமாக பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்களின் சோர்வை போக்க இந்த சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது" என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்... பள்ளியின் சுற்றுச் சுவர் எகிறி குதித்து தப்பியோட்டம்.. என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.