ETV Bharat / bharat

இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை

author img

By

Published : Aug 17, 2021, 11:57 AM IST

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்க உள் துறை அமைச்சகம் இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவுஇசைவு) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியர்கள் விரைவில் விசா பெற்று உடனே தாயகம் திரும்ப முடியும்.

விமானப்படை விமானம்
விமானப்படை விமானம்

காபூல்: ஆப்கன் நாட்டை தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து தூதர்கள், உயர் அலுவலர்கள் உள்பட 120 இந்தியர்களுடன் ராணுவ விமானம் சி-17 இந்தியா நோக்கிப் புறப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இது குறித்து அரிந்தம் பாக்சி கூறுகையில், "தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையத்திலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் காபூலில் இருந்த இந்திய தூதரகம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, முக்கிய ஆவணங்களுடன் இந்திய தூதர்கள், உயர் அலுவலர்கள் உள்பட 120 பேர் இந்திய விமானப்படை விமானம் சி-17 மூலம் தாயகம் அழைத்துவர திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) 120 பேருடன் இந்திய விமானம், காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் டெல்லியில் தரையிறக்கப்படுகிறது.

ஆன்லைன் விசா

ஆப்கனில் உள்ள இந்தியர்கள், தங்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கைவைத்துள்ளனர். அவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை உடனடியாக மீட்க, உள் துறை அமைச்சகம் விசா விதிகளை மறு ஆய்வு செய்துள்ளது.

அந்த வகையில் 'இ-எமர்ஜென்சி எக்ஸ்-மிஸ்க் விசா' என்னும் விரைவு விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில், பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்" என விரிவாக எடுத்துரைத்தார்.

காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பு

இரண்டு நாள்களாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம், மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பென்டகனின் கூட்டுத் தலைமை அலுவலர் ஹாங்க் டெய்லர் தெரிவிக்கையில், "மக்களை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, ராணுவ விமானங்கள் அமெரிக்க கடற்படையினர் உதவியுடன் தரையிறக்கப்படும். முதலாவதாக, இரண்டாயிரத்து 500 அமெரிக்கப் படையினரும், தூதர்களும், அமெரிக்கர்களும் வெளியேற்றப்படுவர். அதைத்தொடர்ந்து, ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. ஏற்கெனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ விமானம் மூலம் 120 இந்தியர்கள் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆப்கன் தலைமை அடிபணிந்துவிட்டது, எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்' - ஜோ பைடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.