ETV Bharat / bharat

பொது சிவில் சட்ட விவகாரம் : பிரதமர் மோடிக்கு திமுக, காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் கண்டனம்!

author img

By

Published : Jun 27, 2023, 5:59 PM IST

பொது சிவில் சட்டத்தை நடமுறைப்படுத்துவது குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு திமுக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Opposition
Opposition

ஐதராபாத் : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போபாலில் உள்ள ராணி கமலாவடி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, பீகா, ஜார்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையிலான 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இஸ்லாம் மத்தத்தில் உள்ள முத்தலாக் குறித்தும், எகிப்து, இந்தோனேஷியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முத்தலாக் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இரண்டு வெவ்வேறு சட்ட விதிமுறைகள் இருந்தால் குடும்பம் செயல்படுமா என்றும் அதேபோல் நாடு எப்படி இயங்கும் என்று கேள்வி எழுப்பினார். அரசியலைமைப்பு அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்வதாகவும் அதில் இரண்டு சட்டங்களை கொண்டு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் சிலர் தங்களது சுயநலத்திற்காக சிலக் குழுக்களை தூண்டி விடுவதாகவும் உச்ச நீதிமன்றம் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்த போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக சிலர் அதை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், நாட்டில் நிலவும் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்த பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், இந்து மதத்தில் பொது சிவில் சட்டத்தை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரும் நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சென்று பூஜை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், எந்தவொரு சட்டம் உருவாக்கப்பட்டாலும் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கூறினார். மேலும் தேர்தல் வருவதால் பிரதமர் மோடி இது போன்று செய்கிறார். என்றும் நாட்டுக்காக அவர் எதுவும் செய்யவில்லை என்றார்.

பொது சிவில் சட்ட விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வாக்கு வங்கி அரசியலில் பாஜக மட்டுமே ஈடுபட்டு வருவதாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி தியாகி தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக முனைப்பு காட்டு வந்தால், கர்நாடகாவில் ஏற்பட்ட அதே சூழலை மீண்டும் சந்திக்க நேரிடும் என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாசுதின் ஒவைசி தெரிவித்தார்.

இதையும் படிங்க : "இஸ்லாமியர்கள் வாழ்வாதாரத்திற்கு எதிர்க்கட்சிகள் என்ன செய்தன..?" பிரதமர் மோடி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.