ETV Bharat / bharat

பீகாரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.. 24 பேர் கவலைக்கிடம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 8:14 AM IST

Updated : Nov 14, 2023, 8:36 AM IST

Fire In Bihar: பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் அதன் தீப்பொறி அருகில் இருந்த கடையில் வைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் டிரம்மில் பட்டு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உடல் கருகி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Fire In Bihar
பீகார் தீ விபத்து

சிவான்: நாடு முழுவதும் நேற்றைய முன்தினம் (நவ.12) தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், எம்.ஹ்ச்.ஷீலா மார்க்கெட் பகுதியில் இரவு 10 மணி அளவில் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறியானது அருகில் இருந்த கடையின் மீது பட்டு கடை தீப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.

உடனடியாக இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் கடையில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட டிரம் இருந்ததால் தீயானது டிரம்மில் பட்டு மள மளவெனப் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கும், இங்கும் ஓடத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் தீயானது மளமளவென அருகில் இருந்த கடைகள் மற்றும் 25 முதல் 30 மீ தொலைவில் இருந்தவர்கள் மீதும் தீ பரவத் தொடங்கியது. இந்த தீயானது ஷீலா மார்க்கெட் முழுவதிலும் பரவத் தொடங்கியது.

உடனே கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 7 தீயணைப்புத் துறையினர், 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் கருதி பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள், அருகில் இருந்த சிவான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும், சிலர் சிகிச்சைக்காக கோரக்பூருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 24 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, ‘பட்டாசு வெடிக்கும்போது அதன் தீப்பொறி அருகில் இருந்த கடையில் பட்டு முதலில் தீ லேசாக பற்றி எரிய ஆரம்பித்தது. அதன்பின், கடையில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட டிரம்மின் மீது தீ பரவியதால் தீயானது மளமளவெனப் பற்றி எரியத் தொடங்கியது” என்றனர்.

இதையும் படிங்க: ஆக்ராவில் ஹோட்டல் பணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

Last Updated :Nov 14, 2023, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.