ETV Bharat / bharat

U, U/A சான்றிதழ்களின் மாற்றம்! ஒளிப்பதிவு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

author img

By

Published : Jul 31, 2023, 6:26 PM IST

சினிமா கதை திருட்டு மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் வழங்கும் வயது அடிப்படையிலான சான்றிதழை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான ஒளிப்பதிவு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

anurag thakur
anurag thakur

டெல்லி : சினிமா கதை திருட்டு மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் வழங்கும் வயது அடிப்படையிலான சான்றிதழை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டத் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை மற்றும் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம் மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என மக்களவையில் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது. காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின் 10வது நாள் கூட்டம் இன்று (ஜூலை. 31) காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மதியம் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய நிலையில், சினிமா கதை திருட்டு மற்றும் மத்திய திரைப்பட வாரியத்தால் வழங்கும் சான்றிதழ்களில் வயது அடிப்படையில் மறுசீரமைப்பது தொடர்பான ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை 27ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், சினிமா கதை திருட்டு தடுக்க மற்றும் இணையத்தில் திரைப்பட உள்ளடக்க திருட்டு பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலும், U, A மற்றும் U/A ஆகிய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் வழங்கப்படும் சான்றிதழ்களில் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக வயது அடிப்படையில் திரைப்படங்களை வகைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை குழு உறுப்பினர்களுக்குத் திரைப்படம் போட்டுக் காட்டப்பட்டு, அவர்களது ஒப்புதலை பெற்று தணிக்கை சான்றிதழ் வழங்கிய பின்னரே படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் பெறாமல் படங்களை திரையிடுவது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.

தணிக்கை சான்றிதழ்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அனைவரும் பார்க்கலாம் (U), வயது வந்தோர் மட்டும் (A), வயது வந்தோரின் வழிகாட்டுதலின் கீழ் (U/A), சிறப்புத் தணிக்கைக்கு உட்பட்டது (S) என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் தற்போது நடைமுறையில் உள்ள U/A சான்றிதழை மூன்று வகைகளாக பிரிக்க இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி வயதுக்கு ஏற்ற UA 7+, UA 13+ அல்லது UA 16+ என U/A சான்றிதழை பிரிக்க இந்த மசோதா வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. UA சான்றிதழ் வகைக்குள் வரும் போது வயது அங்கீகாரம் என்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிகாட்டுதலை பெறுவது அவசியமாகுவதாகவும் அவர்களை தவிர வேறு யாராலும் அதை செயல்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் A அல்லது S சான்றிதழ் கொண்ட திரைப்படங்கள் தொலைக்காட்சி அல்லது மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியிட தனிச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : "மணிப்பூர் விவகாரத்தில் மன்னிப்பு கிடையாது"... உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.