ETV Bharat / bharat

மதம் மாறிய தேவிகுளம் எம்எல்ஏவின் வெற்றி செல்லாது.. தேர்தல் முடிவை ரத்து செய்த நீதிமன்றம்..

author img

By

Published : Mar 20, 2023, 11:03 PM IST

கேரளாவில் பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்ட டி. ராஜாவின் வெற்றி செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதம் மாறிய தேவிகுளம் எம்எல்ஏவின் வெற்றி செல்லாது
மதம் மாறிய தேவிகுளம் எம்எல்ஏவின் வெற்றி செல்லாது

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குமார் 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் தேர்தலுக்கு முன்னதாவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாக கூறப்பட்ட நிலையில், இவரிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆகவே, அவரை தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த நிலையில் இன்று (மார்ச் 20) தீர்ப்பு வெளியானது. அதில், கேரள உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ராஜாவின் வெற்றி ரத்து செய்யப்படுகிறது. பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அவர் போட்டியிட தகுதியற்றவராவார் எனத் தீர்பளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கூறுகையில், “போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டப் பேரவை உறுப்பினரான ஒருவருக்கு சீட் வழங்கியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்த பட்டியலின சமூக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரம் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே தேர்தல் நடத்தும் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நீதிமன்றம் தேர்தல் வெற்றியை ரத்து செய்துள்ளது எனத் தெரிவித்தார். அதோடு போலி ஆவணங்களை தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராதா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 99 ஆம் இருந்த நிலையில், இந்த உத்தரவுக்கு பின் 98 ஆக குறைந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜாவின் தாய் மொழி தமிழாகும். இவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தமிழ் மொழியிலேயே உறுதிமொழியேற்று பதவியேற்றார். இவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்டேசன் வாழ்த்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க யாருக்கும் உரிமை இல்லை" - கேரள உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.