ETV Bharat / bharat

ஆத்திபள்ளி பட்டாசு கடை விபத்து : கடை உரிமையாளர், மகன் கைது! 3 பேருக்கு வலைவீச்சு - கர்நாடக டிஜிபி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 3:22 PM IST

Attibele firecracker tragedy: அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் கடையின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவான 3 பேரை தேடி வருவதாக கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்து உள்ளார்.

Alok Mohan
Alok Mohan

பெங்களூரு : கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார்.

தமிழகம் - கர்நாடக எல்லையான பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி எல்லையை ஒட்டிய பகுதியில் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வந்தது. இந்த கடையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (அக்.7) மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையில் பணியாற்றிய 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், அவர்களது உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு அறிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் நிவாரணத் தொகையை வழங்கினார்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தி கர்நாடக டிஜிபி அலோக் மோகம் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், தீ விபத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், விபத்தில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவான நிலையில் அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கியதில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளின் பாதுகாப்பு தன்மைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அத்திப்பள்ளி விபத்து; உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.