ETV Bharat / bharat

அமுலின் வருகை லாபமா? நட்டமா? ஆந்திராவில் நடப்பது என்ன?

author img

By

Published : May 30, 2023, 10:53 PM IST

Updated : May 31, 2023, 5:05 PM IST

அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய கர்நாடக மற்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆந்திராவில் 30 மாதங்களாக இயங்கி வரும் அமுல் அம்மாநில பால் உற்பத்தியாளர்களுக்கு பலன் அளித்துள்ளதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

Amul
Amul

அமராவதி (ஆந்திர பிரதேசம்) : தமிழ்நாட்டில் ஆவினைப் போன்று கர்நாடகாவில் நந்தினி நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியில் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள், பால் கொள்முதலோடு நின்று விடுவதில்லை. கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்குவது, நோய்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அனைத்துமே இந்த கூட்டுறவு நிறுவனங்களின் பொறுப்பாக உள்ளது.

இந்நிலையில் அமுலின் வருகை கூட்டுறவு சங்க நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் எனவும், மாநில கூட்டுறவு சங்கங்களின் முயற்சியால் விளையும் பலனை மட்டும் எடுத்துக்கொள்வதாக இருக்கும் என தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக தென்மாநிலங்களில் முதல் மாநிலமாக ஆந்திரா பிரதேசம், அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமுல் நிறுவனம் மாநிலத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், அமுலின் செயல் கூட்டுறவு கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் மத்திய உள்துறையோடு, கூட்டுறவுத்துறையையும் கவனித்து வரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். இதே போன்ற எதிர்வினைதான் கர்நாடகத்திலும் உள்ளது.

ஆனால் இதற்கு முன்பாகவே அமுல் நிறுவனத்திற்கு கதவைத் திறந்து விட்டுள்ளது ஆந்திர அரசு. ஆந்திர முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கைகளால், ஆந்திர பால் வளத்துறை கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ் வரும், கூட்டுறவு சங்கங்கள், படிப்படியாக மூடப்பட்டு அவற்றின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமுலை சென்றடைகின்றன.

அமுலின் வருகையால் ஆந்திராவில் பாலுக்கான கொள்முதல் விலை அதிகரித்துள்ளது என்றும் , இதனால் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் பலனடைந்துள்ளனர், என்றும் கூறுகிறார் ஜெகன் . அவர் கூறுவது உண்மை எனில் கர்நாடகாவில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த பாஜக அமுலின் வருகையை ஏன் எதிர்த்தது என்ற கேள்விக்கு பதிலில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அமுலை எதிர்ப்பது ஏன் என்ற கேள்வியும், ஆந்திர விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது-

  • கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ( KMF) 1974ம் ஆண்டு நிறுவப்பட்டது. 22 கிராமங்களில் உள்ள 24 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் 17 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. நந்தினி பிராண்டின் கீழ் 65 வகையான பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெங்களூருவில் அமுல் சென்டர்கள் நிறுவும் முடிவே, கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்பை சந்தித்தது.
  • அதேபோல் தமிழகத்தில் 1981ஆம் ஆண்டு ஆவின் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. 9,673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், அதன் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.

ஆனால் ஆந்திராவில் ஜெகன் அரசு அமுலின் பிரதிநிதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுறவு சொசைட்டிக்கள் மூலம் பாலை திரட்டி அமுலுக்கு வழங்கும் செயல்பாட்டையும் அரசே செய்கிறது. இதற்காக தானியங்கி பால் சேகரிப்பு அமைப்பு, சேமிப்பு கிடங்கு போன்றவையும் நிறுவப்படுகின்றன. சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல் உட்கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச பால்வளத்துறை கூட்டுறவு நிறுவனம் மூலம் பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சித்தூர் டைரியின் கீழ் வரும் மதனப்பள்ளி பிளாண்ட் ஏற்கெனவே அமுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் அமுல் விற்பனையகங்கள் நிறுவுவதற்கான இடமும் ஒதுக்கப்படுகிறது.

இந்த அத்தனை சலுகைகளும் பைசா செலவில்லாமல் அமுல் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. பால்வளத்துறை மட்டுமின்றி விலங்கு நலத்துறை அலுவலர்களும் அமுலுக்காக உழைக்கத் துவங்கிவிட்டனர். பால் கொள்முதலுக்கு 4 ரூபாய் கூடுதலாக தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த ஜெகன், இதற்கு நூதனமான வேறொரு வழியை அமுல் மூலம் கண்டு பிடித்துள்ளார். அமுல் மூலம் பால் உற்பத்தியாளர்கள் வருமானம் அதிகரித்துள்ளது என கூறுகிறார்.

அமுல் நிறுவனத்திற்கு ஆந்திராவில் ஜெகன் பச்சைக்கொடி காட்டி 30 மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலுமே புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநிலத்தில் தற்போது வரை அமுலின் பால் கொள்முதல் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் அளவைக் கூட எட்டவில்லை. அமுல் நிறுவனம் உண்மையிலேயே அதிக விலை வழங்கினால், விவசாயிகள் விற்காமல் இருப்பார்களா? உண்மையில் மற்ற நிறுவனங்களை விடவும் அமுல் குறைவான விலையையே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது. பாலில் உள்ள கொழுப்பை மற்றும் கணக்கிடும் எஸ்.என்.எஃப் முறைப்படி, விவசாயிகளுக்கு வழங்கும் விலை குறைக்கப்படுகிறது.

யதார்த்தத்தில் கிருஷ்ணா மில்க் யூனியன், சங்கம் டைரி மற்றும் விசாகா டைரி போன்றவை லிட்டருக்கு 7 முதல் 15 ரூபாய் கூடுதலாக வழங்குகின்றன. இது தவிர வருடாந்திர போனஸ் வழங்கப்படுகிறது. மாடுகளின் இனப்பெருக்கத்திற்கான செமன் சப்ளை, தீவனம், மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு அளிக்கும் உதவி எல்லாம் அமுல் நிறுவனத்திற்கு லாபமாக மாறுகிறது.

இதையும் படிங்க : கங்கையில் வீசப்பட்ட பதக்கங்கள்? மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் என்ன நடந்தது?

Last Updated :May 31, 2023, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.