ETV Bharat / bharat

Chandrayaan-3: சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு!

author img

By

Published : Aug 21, 2023, 11:50 AM IST

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நாளை மறுநாள் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கவுள்ள நிலையில், லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ISRO
லேண்டர் எடுத்த புகைப்படங்கள்

ஹைதராபாத்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.

அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 14ஆம் தேதி மூன்றாவது முறையாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, நிலவிலிருந்து குறைந்தபட்சம் 150 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்சம் 177 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் பயணித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது.

  • Chandrayaan-3 Mission:

    Here are the images of
    Lunar far side area
    captured by the
    Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).

    This camera that assists in locating a safe landing area -- without boulders or deep trenches -- during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB

    — ISRO (@isro) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 17ஆம் தேதி நிலவின் மேற்பரப்பிலிருந்து 153 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, சந்திரயானின் உந்துவிசை கலனிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. பின்பு உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் பயணித்தன. நேற்று(ஆகஸ்ட் 20) இறுதியாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, நிலவின் மேற்பரப்பிற்கு மிகவும் நெருக்கமாக அதாவது குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர், அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த கட்டமாக லேண்டரின் வேகத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு தோல்வியடைந்தது. இதனால், சந்திரயான்-3 விண்கலத்தை மெதுவாக பாதுகாப்பாக தரையிறக்க விஞ்ஞானிகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து, இறுதியாக லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்படவுள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் வரும் 23ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா (LHDAC) நிலவின் மேற்பரப்பை மிகவும் நெருக்கத்தில் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ இன்று(ஆகஸ்ட் 21) வெளியிட்டுள்ளது. இந்த அதிநவீன கேமரா தரையிறங்க ஏதுவான இடத்தை கண்டறிந்து வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ISRO: சந்திரயான்-3 நிலவில் எப்போது தரையிறக்கப்படும் - புதிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.