ETV Bharat / bharat

ஆதித்யா-எல்1: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 4:24 PM IST

Aditya-L1 ready for launch: ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருவதாகவும், ராக்கெட்டின் தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் ஒத்திகை நிறைவடைந்துவிட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Aditya L1
Aditya L1

பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இஸ்ரோ நீண்ட காலமாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக "ஆதித்யா-எல்1" (Aditya-L1) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது.

இந்த செயற்கைக்கோள் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள 'லெக்ராஞ்ச்' என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

424 கோடி ரூபாய் செலவில் முழுவதுமாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு செய்யும் என்றும், எல்1 புள்ளியிலிருந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் சூரியனை ஆய்வு செய்வதற்காக விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) தொலைநோக்கி, மேக்னோமீட்டர், எஸ்யுஐடி (Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி உள்ளிட்ட ஏழு அதிநவீன ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் நான்கு கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். மூன்று கருவிகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் எனத் தெரிகிறது.

இந்த செயற்கைக்கோள் சூரியனின் மேற்பரப்பு, அதன் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்டப் பணிகள் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ராக்கெட்டின் இறுதிகட்ட சோதனைகள் மற்றும் ஒத்திகை நிறைவடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான கவுண்ட் டவுன் நாளை மறுநாள் (செப்டம்பர் 1) தொடங்கவுள்ளது. ஆதித்யா எல்1 திட்டம், சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டம் என்பதாலும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டம் என்பதாலும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: லெக்ராஞ்ச் புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?- அதித்யா எல்-1 என்றால் என்ன? - விளக்குகிறார் விஞ்ஞானி எபிநேசர் செல்லச்சாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.