ETV Bharat / bharat

பிலிப்பைன்ஸில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்து - இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 3, 2023, 12:24 PM IST

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில், விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர் ஒருவரும், அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

Indian student pilot
விமான விபத்து

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் இலோகோஸ் மாகாணத்தில் உள்ள லாவோக் சர்வதேச விமான நிலையத்தில், எக்கோ ஏர் இன்டர்நேஷனல் ஏவியேஷன் அகாடமி என்ற தனியார் விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் இந்தியாவைச் சேர்ந்த அன்ஷும் ராஜ்குமார் என்ற மாணவர் விமான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 1) பகல் 12 மணியளவில் 'எக்கோ ஏர் செஸ்னா 152' (Echo Air Cessna 152) என்ற சிறிய ரக பயிற்சி விமானத்தில் மாணவர் அன்ஷுமுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்த எட்சல் ஜான் லும்பாவோ என்ற பயிற்சியாளர் பயிற்சி அளித்துள்ளார். அப்போது, இருவரும் பயிற்சி விமானத்தில் லாவோக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுள்ளனர்.

ஆனால், பயிற்சி விமானம் துகுகேராவ் விமான நிலையத்தை சென்று அடையவில்லை, வழியிலேயே மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசின் உத்தரவுப்படி, மீட்புக் குழுவினர் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் சென்று விமானத்தை தேடினர்.

இந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 2) பிற்பகலில் அபயாவோ மாகாணத்தில் பயிற்சி விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அந்த சிதைந்த விமானத்திலிருந்து பயிற்சி மாணவர் மற்றும் அவரது பயிற்சியாளர் இருவரின் உடலும் மீட்கப்படவில்லை. இருவரது உடலும் சிதைந்துபோனதாக என தெரிகிறது.

இது தொடர்பாக அபயாவோ மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத்துறை தலைவர் ஜோஃப்ரி பொரோமியோ கூறும்போது, "இரண்டு இருக்கைகள் கொண்ட செஸ்னா விமானம், புட்டோல் நகரத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. மீட்புக் குழுவினர் புட்டோல் நகரில் விமானத்தில் உடைந்த பாகங்கள் மற்றும் சிதைந்த உடலையும் கண்டுபிடித்தனர்" என்று கூறினார். இதையடுத்து, இந்திய மாணவர் மற்றும் அவரது பயிற்சியாளர் இருவரும் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிலிப்பைன்ஸின் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால், தனியார் விமான பயிற்சி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடியும்வரை விமான பயிற்சி நிறுவனம் மூடப்பட்டிருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கப்பலில் இருந்து விழுந்த 64 வயது இந்திய பெண் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.