ETV Bharat / bharat

Election Commission: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jan 18, 2023, 4:51 PM IST

Election Commission: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

Election Commission:டெல்லி: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்ற காலம் விரைவில் காலாவதியாக உள்ளது. இதையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் கூறுகையில், "வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து சட்டமன்றம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மற்றும் திரிபுரா மாநில சட்டமன்றங்கள் முறையே மார்ச் 15 மற்றும் 22ஆகிய தேதிகளில் காலாவதியாகின்றன.

இதையடுத்து மூன்று மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 16ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 3 மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 31ஆம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ஆம் தேதி கடைசி நாள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய ஜனவரி 30ஆம் தேதி கடைசி நாள் என்றும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலத் தேர்தல் மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள 9ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 73 சதவீத வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

பள்ளி முழு ஆண்டுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு தேர்தல் முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சிபிஎஸ்இ பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படாது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் தெரிவித்தார்.

இந்த 3 மாநிலத் தேர்தலில் ஏறத்தாழ 62 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்கு அளிக்க உள்ள நிலையில், அதில் 31 லட்சத்து 47 ஆயிரம் பேர் மகளிர் வாக்காளர்கள் என்றும், 97 ஆயிரம் பேர் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மற்றும் 31 ஆயிரத்து 700 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே எம்.எல்.ஏ. ஈ.வே.ரா. திருமகன் உயிரிழந்ததால் காலாவதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என்றும்; வேட்பு மனு மறுபரீசிலனை செய்ய 8ஆம் தேதியும்; மனு வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 2ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இத்தோடு சேர்த்து அருணாச்சலப் பிரதேசத்தின் லும்லா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் உள்ளிட்டப் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - வரும் பிப்.27ஆம் தேதி என அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.