ETV Bharat / bharat

2024 LS polls: ஹேம மாலினி, வருண் காந்திக்கு கல்தா..? - உ.பியில் பாஜக திட்டம் என்ன?

author img

By

Published : Jun 11, 2023, 1:20 PM IST

உத்தரபிரதேசத்தில் எம்பிக்கள் ஹேம மாலினி, வருண் காந்தி உள்ளிட்ட பலருக்கு வரும் மக்களவை தேர்தலில் சீட் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயது வரம்பு, கட்சிக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களால் வரும் தேர்தலில் எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது.

Hema Malini
வருண்

உத்தரபிரதேசம்: பாஜக மூத்த தலைவரான அமித்ஷா கடந்த 2014ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் ஒன்று, வயது வரம்பு. அதன்படி, பாஜகவில் 75 வயதைக் கடந்தவர்கள் யாரும் எம்பி, அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்க முடியாது.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உத்தரபிரதேச பாஜகவில், வரும் மக்களவைத் தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள்? என்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதில், தற்போதுள்ள எம்பிக்களில் 75 வயதைக் கடந்தவர்கள், தீவிரமாக செயல்படாதவர்கள் உள்ளிட்டோரின் பட்டியலை தயாரித்து வருவதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

அதன்படி, கான்பூர் எம்பி சத்யதேவ் பச்சௌரி 75 வயதைக் கடந்ததால், அவருக்கு வரும் மக்களவை தேர்தலில் சீட் மறுக்கப்படலாம். அவருக்கு பதிலாக, உத்தரபிரதேச சட்டப்பேரவை சபாநாயகரான சதீஷ் மஹானா கான்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பரேலி எம்பி சந்தோஷ் கங்வாருக்கும் வயதை காரணம் காட்டி சீட் மறுக்கப்படலாம் என தெரிகிறது.

அதேபோல், இரண்டு பெண் எம்பிக்களுக்கும் வயது வரம்பு காரணமாக சீட் மறுக்கப்படக்கூடும் என தெரிகிறது. அதில், ஒருவர் மதுரா எம்பி ஹேமா மாலினி, மற்றொருவர் பிரயாக்ராஜ் எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷி. துமரியகஞ்ச் எம்பி ஜக்தாம்பிகா பால், மீரட் எம்பி ராஜேந்திர அகர்வால், ஃபிரோசாபாத் எம்பி சந்திரசென் ஜடான் ஆகியோருக்கும் வயது காரணமாக சீட் வழங்கப்படாது என தெரிகிறது.

வயது வரம்பு மட்டுமல்லாமல், கட்சி விதிமுறைகளை மீறுவது, கட்சிக்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இந்த முறை சீட் வழங்கப்படாது என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, பிலிபிட் எம்பியான வருண் காந்திக்கு இந்த முறை சீட் மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது. வருண் காந்தி பாஜகவையும், அதன் கொள்கை - செயல்பாடுகளையும் பொதுவெளியில் விமர்சித்து வருபவர்.

இதை தவிர, தங்களது தொகுதிகளில் சிறப்பாக செயல்படாத எம்பிக்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கும் சீட் மறுக்கப்படும் என தெரிகிறது. அதேநேரம், வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புது முகங்களை இந்த தேர்தலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தலைமையுடன் உத்தரபிரதேச பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருப்பதால், சீட் வழங்குவதில் மிகவும் கவனமாக செயல்படுவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: NCP: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானர் சுப்ரியா சுலே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.