கேரளா செவிலியருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை.. மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு!

கேரளா செவிலியருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை.. மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு!
Kerala Nurse Nimisha Priya: ஏமன் செல்ல அனுமதி கோரி நிமிஷா பிரியாவின் தயார் பிரேமகுமாரி தாக்கல் செய்த வழக்கில் ஒரு வாரத்தில் முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலக்காடு: நிமிஷா பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டிலிருந்துள்ளனர். இந்த நிலையில், அவரது கணவர் மற்றும் மகள் இந்தியாவிற்குத் திரும்பினர். ஆனால், சில வேலை காரணமாக நிமிஷா பிரியா ஏமன் தங்கி இருந்தார். மேலும், ஏமன் நாட்டிலுள்ள தலால் மெஹதி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதனால், தலால் மெஹதி என்பவர் நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளார். நிமிஷா பிரியா கேட்ட போது பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.
இதனால், நிமிஷா பிரியாவால் இந்தியா வர முடியாத நிலை இருந்துள்ளது. இதனையடுத்து, தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும் முயற்சியில் 2017ஆம் ஆண்டு தலால் மெஹதிக்கு மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், தலால் மெஹதி உயிரிழந்தார். மேலும், அவரது உடலை மறைக்கும் முயற்சியின் போது ஏமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு ஏமன் நீதிமன்றம் நிமிஷா பிரியாவிற்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அதன் பின் 6 வருடங்களாக ஏமன் சிறையில் நிமிஷா பிரியா இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஏமன் செல்ல அனுமதி கோரி நிமிஷா பிரியாவின் தயார் பிரேமகுமாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவிக்கும் போது, "ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஏமன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேல் முறையீட்டை ஏமன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், ஏமன் அதிபரால் மட்டுமே நிமிஷா பிரியாவின் மரணத்தை ரத்து செய்ய முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
நிமிஷாவின் தயார் தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர்.சுபாஷ் ஆஜராகி, "நிமிஷா பிரியாவின் மேல் முறையீட்டு மனு ஏமன் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவே ஏமன் செல்ல அனுமதி வழங்க வேண்டும். மேலும் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது எதிர்பாராதது. ஆனால், ஏமன் சட்டத்தின் படி உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ரத்தப் பணத்தை ஏற்றுக் கொண்டால் தண்டனையிலிருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஏமன் யார் செல்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஏமன் நாட்டின் சட்டத்தின்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்னிக்க முடியும். அதற்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்கும் தொகையைத் தர்மப் பணமாக (ரத்த பணம்) செலுத்த வேண்டும்.
இதன்படி கொலை செய்யப்பட்ட தலால் மெஹதி குடும்பத்தினர் இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியை ஏமன் சிறை அதிகாரிகள் முன்பு தர்மப் பணமாகக் கேட்டுள்ளனர். ஆனால் அதன் பின் அதை ஏற்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
