ETV Bharat / bharat

பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு ராணுவ வீரர்கள் செய்த உதவி!

author img

By

Published : Dec 19, 2022, 1:28 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலை வசதி இல்லாத கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, பாதுகாப்பு படை வீரர்கள் கட்டியோடு தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலியால் துடித்த பெண்
பிரசவ வலியால் துடித்த பெண்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பொட்கபள்ளி கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அழைத்துச் செல்ல முறையான பாதை இல்லாததால், பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் கட்டிலில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று உதவினர்.

சுக்மா மாவட்டம் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கூட அங்குக் கிடைக்கப் பெறுவதில்லை. இதன் காரணமாக கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியோர் கிராமத்தில் பாதுகாப்புப் படை முகாமில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் சுகாதார மையம் தொலைவில் இருப்பதால், கிராம மக்கள் பொட்கபள்ளி முகாமில் உள்ள வீரர்களிடம் உதவி கோரினர். இதனால் கோப்ரா மருத்துவ அதிகாரி தன் மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணுக்குத் தேவையான மருத்துவ முதலுதவிகளை வழங்கினார்.

பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் கிராமத்தில் சரியான சாலைகள் இல்லாததால், அந்தப் பெண்ணை வீரர்கள் சிலர் உடனடியாக ஒரு கட்டிலில் வைத்து தூக்கி சென்றனர். அதன் பின் ஒரு சிவில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு. அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் சென்றதும் மாயாவுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. பின்னர் மாயா மற்றும் அவரது குடும்பத்தினர் சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிருபர்: உடல் உறுப்புகள் தானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.