ETV Bharat / bharat

PUNJAB: விருப்ப ஓய்வு பெற்று வெளிநாடுகளில் குடியேறும் அரசு ஊழியர்கள்; அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்!

author img

By

Published : May 19, 2023, 1:59 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, வெளிநாடுகளில் குடியேறும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் உள்ளனர்.

GOVERNMENT
பஞ்சாப்

பஞ்சாப்: பஞ்சாபில் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இளைஞர்களிடையே வெளிநாடுகள் மீதான மோகம் அதிகரிப்பதற்கு, பஞ்சாபில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் அதே நேரத்தில், பஞ்சாபில் அரசுப் பணியில் இருப்பவர்களும் வேலையை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்வது வியப்பை ஏற்படுத்துகிறது. பஞ்சாபில் மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். சாதாரண அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

காவல்துறை ஊழியர்கள்: பஞ்சாபில் உள்ள முக்கியத் தொழில்நகரமான லூதியானாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையில் பணிபுரிந்த 91 ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெற்றனர். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் 18 காவலர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் உள்பட 60 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். 2022-ல் காவல்துறையில் 28 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, பஞ்சாபில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்று, வெளிநாடுகளில் சென்று குடியேறியுள்ளனர். இந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர், தங்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேறியதால், தாங்களும் விஆர்எஸ் பெற்றுக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஓராண்டில் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 போலீசார் விஆர்எஸ் பெற்று, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தங்களது பிள்ளைகளுடன் சென்று குடியேறிவிட்டனர்.

அரசு ஆசிரியர்கள்: பஞ்சாபில் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அதிகளவில் வெளிநாடு செல்கின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில், சுமார் 304 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் விருப்ப ஓய்வு கூட கொடுக்காமலேயே சென்றதால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பல அரசு ஊழியர்கள் முன் அனுமதியுடன் நீண்ட விடுப்பு பெற்றுவிட்டு வெளிநாடு சென்றுவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு ஊதியமும் கிடைக்கும். இதுபோல், வெளிநாடுகளுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதுகாப்புப்படை அதிகாரிகள்: எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, 81,007 பாதுகாப்புப் படை அதிகாரிகள் தங்களது பணிக்காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், 15,994 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் பலர் வெளிநாடு செல்வதற்காக ராஜினாமா செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காவல்துறையினர், ஆசிரியர்கள் போன்றோர் விருப்ப ஓய்வு பெற்று வெளிநாடு செல்லும் போக்கு குறித்து சமூக ஆர்வலர் பியாரே லால் கூறும்போது, "அரசு வேலையை விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் இந்தப் போக்கின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அரசுப்பணியில் ஊழல் செய்து அதிகப் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடு சென்று தொழில் செய்கிறார்கள். காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோர் பணியால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். இதுபோல விருப்ப ஓய்வு பெறும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வெளிநாடுகளில் குடியேறுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: "பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு விதித்த தடையை நீக்க முடியாது" - உச்சநீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.