ETV Bharat / bharat

ராமர், சீதை சிலை செய்ய நேபாளத்தில் இருந்து உ.பி.க்கு சாளக்கிராம கற்கள் வருகை!

author img

By

Published : Jan 31, 2023, 8:25 PM IST

ராமர் மற்றும் சீதையின் சிலைகள் செய்ய 260 மில்லியன் ஆண்டுகள் பழமையான சாளக்கிராம கற்கள் நேபாளத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

சாளக்கிராம கற்கள்
சாளக்கிராம கற்கள்

கோரக்பூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2024ஆம் ஆண்டுக்குள் கோயில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டப் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்குத் தேவையான ராமர் மற்றும் சீதையின் சிலைகளை செய்ய நேபாளத்தில் இருந்து திருமாலுக்கு உகந்ததாக கூறப்படும் சாளக்கிராம கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 260 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரு கற்களை கண்டகி நதியில் இருந்து எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம பிரானின் குழந்தை வடிவம் மற்றும் மாதா சீதா தேவியின் சிலைகளை இந்த கற்கள் கொண்டு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக லாரிகளில் பீகார் வழியாக கோரக்பூருக்கு கொண்டு வரப்படும் கற்களுக்கு பக்தர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோரக்பூருக்கு கொண்டு வரப்படும் கற்களுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்ற பின் அயோத்திக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோரக்பூருக்கு வரும் சாளக்கிராம கற்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்து வழிபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பூஜையைத் தொடர்ந்து சாளக்கிராம கற்களுக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் மட்டும் கிடைப்பதாக கூறப்படும் சாளக்கிராம கற்களில் சிலை செய்ய கொண்டு வந்த இரண்டு கற்களையும் சேர்த்து 40 டன் எடை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி ஆற்றங்கரைகளில் இந்த கற்கள் காணப்படுகின்றன.

இக்கற்களில் திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுவதாக கூறப்படுவதால் விஷேசமாக அனைவராலும் கருதப்படுகிறது. மேலும் இந்த கற்கள் இருக்கும் வீடு வைகுண்டத்திற்கு சமம் என கூறப்படுவதால் பெரும்பாலான மக்கள் சாளக்கிராம கற்களை தங்கள் வீடுகளில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விமானத்தில் மது போதையில் அரை நிர்வாணத்துடன் பெண் பயணி ரகளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.